புதுச்சேரி தி.மு,க மகளிர் அணி சார்பில், குஷ்பு உருவ பொம்மை எரித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அரசு ரூ. 1000 பிச்சை போடுகிறது
என நடிகை குஷ்பு ஆணவமாக பேசியதாக புதுச்சேரி தி.மு.க மகளிர் அணி சார்பில் குஷ்புவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், உருவ பொம்மை எரித்தும், துடைப்பம், செருப்பால் அடித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு மகளிருக்கு ரூ. 1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. குஷ்புவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக–வினர் மற்றும் பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில மாநில மகளிர் அணி மற்றும் மகளிர். தொண்டரணி சார்பில், குஷ்புவை கண்டித்து, காமராஜர் சாலை பெரியார் சிலை அருகில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சுமதி முன்னிலையில் மகளிர் அணியினர் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை தீயிட்டு கொளுத்தியும், துடைப்பம், செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தொடர்ந்து நடிகை குஷ்பு தமிழ்நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“