/indian-express-tamil/media/media_files/2025/03/26/Reb17AmgSG5RFI2A1MuF.jpeg)
புதுச்சேரியில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு முதல் இலவச சீருடை மற்றும் காலனி வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின் மானிய கோரிக்கைகள் குறித்தான பதில் உரைகளும் இடம்பெற்றன.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்ததாவது;
புதுச்சேரியில் பொருளாதாரம் மற்றும் சைபர் குற்றம் அதிகரித்து வருகின்றது. சி.பி.சி.ஐ.டி போலீசார் தற்போது பொருளாதார குற்றங்களை கண்டறிந்து வருகின்றனர். பொருளாதார குற்றம் செய்வர்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில், போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும். புதுச்சேரியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பத்துள்ள நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் 2,கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருருடை இலவச சைக்கிள்,லேப்டாப் போன்றவை வழங்கி வருகின்றோம் இந்த ஆண்டு முதல் அவர்களுக்கு காலனி மற்றும் புத்தகப்பை வழங்கப்படும். மாணவ மாணவிகளை கண்காணிப்பதற்காக ஸ்மார்ட் அடையாள அட்டை திட்டமும் இந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் முழுமையாக அரசே செலுத்தி வருகின்றது. இந்த ஆண்டு முதல் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு செவிலியர், வேளாண், சட்டம், மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவை படிக்கும் மாணவ மாணவிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் கல்வி கட்டணம் செலுத்தப்படும்.
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு அனைத்து வீதிகளிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நகர மற்றும் கிராமப்புறங்களில் மினி ஸ்டேடியம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மற்றும் உலக அளவில் பல்வேறு போட்டிகளை வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. அதற்காக ஒன்பது கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் அவர்களுக்கு இந்த தொகையும் வழங்கப்படும், வெளி மாநிலங்களுக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுக்கு உண்டான செலவையும் அரசை ஏற்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.