புதுச்சேரி மின்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார் மய நடவடிக்கையை கைவிட வேண்டும் என புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 4 பிராந்தியங்களிலும் மின்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் காரணத்தை கூறி அரசு மின்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதால், பணி சுமை அதிகரித்துள்ளதாக மின்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மின்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பொறியாளர், தொழிலாளர்களின் அனைத்து பதவிகளையும் நிரந்தரம் செய்ய வேண்டும்,தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி பிராந்தியமான புதுச்சேரி, காரைக்கால்,மாகே, ஏனாம் 4 பிராந்தியங்களிலும் மின்துறை பொறியாளர், தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புதுச்சேரியில் சங்கத்தின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். புதுவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தால் மின் கட்டண வசூல் மையங்கள் பூட்டிக்கிடந்தது. இதனால் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர்.இதேபோல காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் மின்துறை தலைமை அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.