சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ராணுவம்- துணை ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு, பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இந்திய மக்களை பத்திரமாக மீட்டுவர மத்திய அரசு ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சூடானில் சிக்கியிருக்கும் புதுச்சேரியை சேர்ந்தவர்களை பத்திரமாக மீட்டு தர வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
Advertisment
இந்நிலையில், மத்திய அரசின் ஆபரேஷன் காவேரி திட்டம் மூலம் புதுவை வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் முருகன்(38) சூடானில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திருப்பினார். புதுச்சேரி திரும்பிய அவர் இன்று(மே 6) புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கி, தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், பேரிடர் மேலாண்மைத்துறை மாவட்ட துணை கலெக்டர் சௌந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், நான் 10 ஆண்டுகளுக்கு மேலாக சூடானில் பணியாற்றி வருகிறேன். குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தேன். 8 மாதம் முன்பு குடும்பத்தை இங்கு விட்டு நான் மட்டும் சூடான் சென்றேன். அங்கு ரபக் என்ற நகரில் சர்க்கரை ஆலையில் பொறியாளராக பணியாற்றி வந்தேன். உள்நாட்டு போர் தொடங்கியது. நான் அங்கு சிக்கிக் கொண்டேன். அதன் பின் இந்திய அரசின் ஆபரேஷன் காவேரி திட்டம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டேன். முன்னதாக புதுவை ஏம்பலத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாயகம் திருப்பினார் என்று கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“