புதுச்சேரி தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு நடைபெற்றது. இதில் ஏனாமை சேர்ந்த இளைஞர் கோனா வீரபாபு என்ற இளைஞர் இ.டபிள்யூ.எஸ் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் அவரது சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்ற போது, ஏனாமை சேர்ந்த நபர் ஒருவர், கோனா வீரபாபுக்கு அதிக சொத்து உள்ளதாகவும் அதனால் அவரை பணியில் சேர்க்கக்கூடாது என ஏனாம் நிர்வாகி உட்பட ஆட்சியாளர்களிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவருக்கு பணி வழங்க முடியாது என ஏனாம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர், ஆளுநர் மற்றும் முதல்வருக்கு கடிதம் அனுப்பியதுடன் இன்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சுங்கர கார்த்திக், கடம்செட்டி ராமமூர்த்தி,மகபு சுப்பாராவ் ஆகியோருடன் சென்று ஏனாம் நிர்வாகி முனுசாமியிடம் மனு அளித்து வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.