2023-24 ஆண்டில் மட்டும் சுமார் ரூ.60,000 கோடி அளவுக்கு மீன் ஏற்றுமதி - புதுச்சேரியில் மத்திய அமைச்சர் பேச்சு

2013-14 இல் சுமார் 95 லட்சம் டன்னாக இருந்தது, இப்போது 2023-24 இல் 184 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது. உலகின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 8 % இந்தியா உற்பத்தி செய்கிறது – புதுச்சேரி துணைநிலை ஆளுனர்

2013-14 இல் சுமார் 95 லட்சம் டன்னாக இருந்தது, இப்போது 2023-24 இல் 184 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது. உலகின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 8 % இந்தியா உற்பத்தி செய்கிறது – புதுச்சேரி துணைநிலை ஆளுனர்

author-image
WebDesk
New Update
puducherry fish

2023-24 ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 60,000 கோடி அளவுக்கு சுமார் 17,81,000 மெட்ரிக் டன் மீன் உணவை நாம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறோம் என மத்திய மீன்வளத்துறை அமைச்சர் இன்றும் (ஏப்ரல் 16) புதுச்சேரியில் தெரிவித்தார்.

Advertisment

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. 

இந்தநிகழ்ச்சியில் பேசிய மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஜார்ஜ் குரியன் 2023-24 ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 60,000 கோடி அளவுக்கு சுமார் 17,81,000 மெட்ரிக் டன் மீன் உணவை நாம் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

பின்னர் இவ்விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பேசியதாவது;

Advertisment
Advertisements

புதுச்சேரி அரசு, மீன்வளத் துறையின் சார்பில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிகள் புதுச்சேரியின் வரலாற்றில் குறிக்கப்பட வேண்டியவை. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியின் மிக விருப்பமான திட்டங்களின் ஒன்றான பிரதம மந்திரி மத்ஸ்யா சம்படா யோஜனா (PMMSY) என்ற மீன்வள மேம்மபாட்டுத் திட்டத்தின்கீழ் இன்று பல்வேறு திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. அதோடு மீனவ சமுதாய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

பிரதமரின் வழிகாட்டுதலோடு, மீன்வளத் துறையை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான நான்காவது எஞ்சினாக உருவாக்கியதில் சிறப்பாக பங்காற்றி, பிரதமரின் நம்பிக்கையைப் பெற்று இருக்கும் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சரும் எனது நண்பருமான ஜார்ஜ் குரியனோடு இந்த விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதை பெருமையாகவும் நினைக்கிறேன். ஏனென்றால், அண்மையில் நான் புதுதில்லியில் அவரை சந்தித்து இந்த மீன் வள மேம்பாட்டு திட்டம் குறித்து பேசினேன். அப்போது புதுச்சேரிக்கும் காரைக்காலுக்கும் நான் நேரடியாக வந்து திட்டங்களை தொடங்கி வைக்கிறேன் என்று சொல்லி தன்னுடைய அத்தனை பணிகளுக்கு இடையிலும் இரண்டே வாரத்தில் இங்கு வந்து விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார்.

பிரதமரின் இந்த மீன் வள மேம்பாட்டுத் திட்டம், தேசிய அளவில் 2020-இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்திய மீன்வளத்துறை அபரிதமான வளர்ச்சியை கண்டு இருக்கிறது. மீன் உற்பத்தியில் உலகில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிறது.
2013-14 இல் சுமார் 95 லட்சம் டன்னாக இருந்தது, இப்போது 2023-24 இல் 184 லட்சம் டன்னாக அதிகரித்து இருக்கிறது. உலகின் மொத்த மீன் உற்பத்தியில் சுமார் 8 % இந்தியா உற்பத்தி செய்கிறது. அதுமட்டும் அல்லாமல் 2023-24 ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 60,000 கோடி அளவுக்கு சுமார் 17,81,000 மெட்ரிக் டன் மீன் உணவை நாம் ஏற்றுமதி செய்து இருக்கிறோம். PMMSY போன்ற தொலை நோக்குத் திட்டங்களின் பயனாக இந்த நிலையை அடைந்து இருக்கிறோம் என்பதை நாம் மறுக்க முடியாது. அதற்காக பிரதமருக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் மீனவளத்தை, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது பற்றிய ஒரு ஆலோசனை கூட்டத்தை ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நடத்தினேன். அதில், நாடு முழுவதும் இருந்து மீன்வள ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள். அப்போது, இஸ்ரோ நிறுவனத்தின் உதவியோடு செயற்கைகோள் தகவல்களின் அடிப்படையில் மீன் வளம் அதிகம் இருக்கும் இடங்களை கண்டறிவது, மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை அறிந்து கொள்வது போன்ற வசதிகளை புதுச்சேரி மீனவர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினேன்.

மீன் உற்பத்தி அல்லது மீன் பிடிப்பது என்பது வெறும் தொழில் அல்ல. அது நம்முடைய பண்பாடு, பாரம்பரியம். நம்முடைய வாழ்வியலோடு, இயற்கையோடு ஒன்றாக கலந்து இருப்பது. மீன்வளத் துறையின் வளர்ச்சிக்காக நாம் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அந்த தொழிலை விரிவுபடுத்தவோ அல்லது மேம்படுத்தவோ மட்டும் அல்ல. மீனவ சமுதாயத்திற்கு ஒரு பாதுகாப்பான, நம்பிக்கையான வாழ்க்கை சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக தான். அதன் மூலமாக மீனவ பொருளாதார வளர்ச்சியை ஒரு பொருளாதார இயக்கமாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதும் அதில் அடங்கும்.

மீனவர்களுக்கு முதியோர் உதவித் தொகை, மீன்பிடித் தடைக்கால உதவிகள், மீன்பிடி படகுகள் வாங்கவும், பழுது பார்க்கவும் மானியம், டீசல் மானியம் என்று எத்தனையோ நலத் திட்டங்களை மீனவ சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், PMMSY என்ற உயிரோட்டமான திட்டத்தின் கீழ் திட்டப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டப் பணிகள் மீன்வளத் துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும், இந்த துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்தும், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்பதை விட, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும், கடலோர கிராமங்களின் வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாக இருக்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்கி, மீனவர்களின் பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்தும் என்பதுதான் உண்மை.

மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், டிரான்ஸ்பாண்டர்கள், அவர்களுக்கு பாதுகாப்பும் நம்பிக்கையும் தந்து அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வழி வகுக்கும். இன்று, கடலோர கிராமங்களில் காலநிலை மாற்றத்தை தாங்கும் படியான வீடுகள், கட்டிடங்களை கட்டித் தருவதற்கான முயற்சியை அரசு  எடுத்து வருகிறது. 
மீன் வளத்தை மேம்படுத்த கடலில் செயற்கை பாறைகள் அமைக்கப்படுகிறது. பாரம்பரிய மீன் பிடித் தொழிலை ஊக்குவிக்க கடல்பாசி மற்றும் கடல் கூண்டு மீன்வளர்ப்பு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மினி துறைமுகம் என்று சொல்லப்படும் மீன் இறங்கு தளம் அமைக்கப்படுகிறது. இதில், ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்கும் திட்டத்தை முக்கியமாக நான் குறிப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் நம்முடைய மீனவர்கள் கடல் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக அடிக்கடி கைது செய்யப்படுவதால் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் படும் துயரம் அதிகம். அவ்வப்போது இலங்கை அரசிடம் பேசி அவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றன. 

பிரதமரின் முயற்சியால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3,700 மீனவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதுபோன்ற துயரங்களை முழுவதுமாக போக்க, இயற்கை சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், அந்தமான்-லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்கடல் மீன் பிடிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து உள்ளது. இந்த திட்டத்தால் புதுச்சேரி – காரைக்கால் மீனவர்கள் அதிகம் பயனடையப் போகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுமட்டும் அல்ல. இயற்கை நமக்கு அளித்த கொடை இந்த மீன் வளம். இயற்கை அளித்த இந்த மீன் வளத்தை பாதுகாத்து நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு நாம் ஒப்படைக்க வேண்டும். தற்போது மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் இழுவை படகுகள் இந்த மீன் வள ஆதாரங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிக சேதத்தை விளைவிக்கிறது. அதனால் மீன் வளம் பாதிக்கப்படுகிறது என்பதால் பல நாடுகளில் அதற்கு தடை விதித்து இருக்கிறார்கள். இந்த ஆழ்கடல் மீன்பிடி திட்டம் அதற்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். நவீன தொழில்நுட்ப உத்திகள் மூலமாக கடல் வளத்தை நாம் பாதுகாக்க முடியும் என்பது இந்த ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தின் மற்றொரு அனுகூலம்.

அண்மையில் புதுதில்லியில் பிரதமரையும் மீன்வளத்துறை அமைச்சர்களையும் சந்தித்தபோது விலை அதிகமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் புதுச்சேரி மீனவர்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்கு தேவையான மானியம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நம்முடைய கோரிக்கையை ஏற்று தற்போது தரப்படும் 60% மானியத்தை உயர்த்தி தர மத்திய அரசு சம்மதித்து இருக்கிறது. அதற்காக பிரதமருக்கும் மீன்வளத்துறை அமைச்சர்களுக்கும் புதுச்சேரி மீனவர்கள் சார்பாக என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்று தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டங்கள், நம்முடைய மீனவ சகோதார-சகோதரிகளின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சிகள் எல்லாம் SABKA SAATH SABKA VIKAS “அனைவருக்குமான வளர்ச்சி – அனைவரின் வளர்ச்சி: என்ற தாரக மந்திரத்தை நோக்கிய நம்முடைய லட்சியப் பயணத்தின் ஒரு பகுதியாக அமைய வேண்டும்.

மீனவ சகோதர-சகோதரிகள் இந்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, பெண்களும் இளைஞர்களும் மீன் வளத்துறையில் ஆர்வத்தை வளர்த்துக் கெண்டு தொழில் முனைவோராக வளர வேண்டும். கடல் சார்ந்த பொருளாதாரத்தின் ஊக்க சக்திகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: