கனமழை எதிரொலியாக வருகிற 16, 17 ஆம் தேதிகளில் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகம்மது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை மண்டல வானிலை மையத்தின் அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து தெற்கு ஆந்திர, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வட தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்றும், நாளையும் தமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காற்று அதிகமாக வீசும் இடங்களுக்கு செல்லாமல் மிகவும் பாதுகாப்பாக மீன்பிடிப்பில் ஈடுபட வேண்டும்.
வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வட தமிழக மற்றும் புதுச்சேரி கடல் பகுதிகளில் மீன்பிடிக்கக் கூடாது. அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை முன்எச்சரிக்கை செய்திகளை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“