புதுச்சேரி பாண்டி மெரினா அருகில் மீனவர்கள் புழக்கத்தில் உள்ள பகுதியை அனுமதி இல்லாமல் ஆக்கிரமித்து பொழுதுபோக்கு அம்சங்கள் விரிவுபடுத்தும் பாண்டி மெரினா என்ற தனியார் நிர்வாகத்தை கண்டித்தும், மீனவர்களுக்கு நன்மை செய்யாத மீன்வளத்துறை மற்றும் துறைமுகத் துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று (செப்டம்பர் 13) காலை 10.00 மணி அளவில் சோனாம்பாளையம் சந்திப்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுப்பட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு வம்பாகீரப்பாளையம் மீனவ பஞ்சாயத்து தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். மீனவர்கள் மறியல் போராட்டத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், மீனவர்களுக்கு ஆதரவாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த உப்பளம் வம்பாகீரப்பாளையம் கடற்கரை பகுதியில் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.4 கோடி செலவில் 32-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டது. அந்த பகுதிக்கு பாண்டி மெரினா என பெயரிடப்பட்டு பலகோடி ரூபாய் செலவில் மின் வசதிகள், சாலை வசதிகள் புதுச்சேரி அரசால் செய்யப்பட்டது.
கட்டிமுடிக்கப்பட்ட பாண்டி மெரினா பகுதியை அரசே ஏற்று நடத்தியிருக்க வேண்டும். அல்லது அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் கூட்டுறவு சங்கத்திடம் உரிய வாடகையை நிர்ணயம் செய்து அரசு ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் அதுபோன்று எதுவும் செய்யாமல் மக்களுடைய வரிப்பணித்தில் பலகோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இந்த பாண்டி மெரினா கடற்கரையை கடந்த திமுக, காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு குறைந்த விலையில் 32 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டன.
தற்போது புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை பாஜக என அறிவித்து கொண்டதால் இவர்களின் சட்டவிரோத அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் புதுச்சேரி பாஜக துணை நிற்கிறது. வாடகைக்கு விடப்பட்ட பகுதியில் 32 கடைகள் மற்றும் பாண்டி மெரினா கடற்கரைக்காக அனுமதிக்கப்பட்ட இடம் மட்டும் இவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது. ஆனால் தற்போது அங்கு புதியதாக 50-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளது.
கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்குள் புதிய கட்டுமானங்கள் தனி நபர்களால் கட்டப்பட்டதற்கு பிபிஏ, உள்ளாட்சித்துறை, கடற்கரை மேலாண்மை வாரியம், சுற்றுப்புரச்சூழல் உள்ளிட்ட எந்த துறையிடமும் இவர்கள் அனுமதி பெறவில்லை. இவர்களுக்கு அளிக்கப்பட்ட இடத்தில் இவர்களாகவே தன்னிச்சையாக ராட்சத ராட்டினம், பேட்டரியில் இயங்கும் ரயில் விளையாட்டு, குதிரை மற்றும் ஒட்டக சவாரிகள், உயிர் பயத்தை ஏற்படுத்தும் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு இயந்திரங்கள் அமைத்து மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டுகின்றனர்.
இதன் மூலம் இவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சிறிய அளவில் கூட கேளிக்கை வரி செலுத்துவதில்லை. மேலும் கடற்கரை பகுதியில் சுற்றுலா மூலம் வரும் வருமானத்தில் 10 சதவீதம் மீனவர்களுக்கு ரிஸ்க் நிதி வழங்க வேண்டும். அதையும் இந்த தனியார் நிர்வாகம் வழங்குவதில்லை. மேலும் அந்த இடத்திலேயே மதுபான கடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வரும் பயணிகள் அங்கு மது அருந்துவதும், பல்வேறு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சுற்றுலா துறை மூலம் பயணிகள் ஏற்றப்பட்டு நடைபெறும் படகு போக்குவரத்திற்கு இவர்கள் அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பாண்டி மெரினா கடற்கரையின் பின்புறத்தில் இவர்களாகவே மாங்குரூஸ் காடுகளை அழித்து ஆற்றோர பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து படகு போக்குவரத்தை நடத்த ஆரம்பகட்ட பணியை செய்து வருகின்றனர். படகு போக்குவரத்தை இவர்களுக்கு நடத்த அனுமதி
அளித்தால் ஏற்கனவே இந்த படகு போக்குவரத்தை நடத்திக்கொண்டிருக்கும் சுமார் 20-க்கும் மேற்பட்ட வம்பாகீரப்பாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள். இதனால் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
இது சம்பந்தமாக பலமுறை அரசிடம் இப்பகுதியின் மீனவ சமுதாயத்தினர் எடுத்துக்கூறியும் இதை நடத்துபவர்கள் ஆளும் கட்சி பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு செயல்களுக்கு அரசே துணை போகின்றது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு இவர்கள் அந்த மெரினா கடற்கரையை பயன்படுத்திக்கொள்ள விதிக்கப்பட்ட ஒப்பந்தத்தை அரசு 5 ஆண்டுகளாக குறைத்து 10 ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த மெரினா கடற்கரையால் வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதார பகுதியான கடற்கரையிலேயே அந்நியப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதே நிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் இங்குள்ள மீனவர்கள் கடற்கரையை பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை நிச்சயமாக ஏற்படும். எனவே மீனவர்களின் வாழ்வாதார எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு ஒரு விசாரணை கமிஷன் அமைத்து இந்த மெரினா கடற்கரையை தனியாரிடம் இருந்து அரசு கைப்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.