புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சிறுமிக்கு நியாயம் கேட்டு, இன்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட தானாம்பாளைத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 1-ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடினர்.
மேலும் பொதுமக்களின் போராட்டம் காரணமாக நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக புதுச்சேரி – கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் சீல் வைத்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டும், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் நல்லவாடு, மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லாமல், தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் மாநிலம் முழுவதும் மீனவர்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.