பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
புதுச்சேரியில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் மோசடிகள், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களை எந்த வகையில் எல்லாம் ஏமாற்றலாம் என மோசடி பேர்வழிகள் திட்டமிட்டு இணையதளம் வழியாக பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். மற்றவர்களின் வாட்ஸ்அப், முகநூலை ஹேக்கிங் செய்து உதவி கேட்டு மோசடி, வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித்தருவதாக மோசடி, பல கோடி பரிசு விழுந்துள்ளதால் சுங்க வரி கட்டச் சொல்லி மோசடி, அதிக முதலீடு ஆசை காட்டி மோசடி என நூதனமான மோசடிகளை அரங்கேற்றி வருகின்றனர். போராசைப்பட்டு இதுபோன்ற மோசடிகளில் சிக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்தும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இதனால் இணையவழி கும்பலின் மோசடிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், பிட்னஸ் என்ற பெயரில் நூதன மோசடி புதுச்சேரியில் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியில், குறைந்த நாட்களில் உங்கள் எடையை குறைக்க வேண்டுமா? நீங்கள் அழகாக வேண்டுமா? என கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்யப் பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை நம்பிய புதுச்சேரி சேர்ந்த பெண்கள் சிலர் அந்த விளம்பர பக்கத்தை பார்வையிட்டனர். அப்போது இன்ஸ்டாகிராமில் பேசிய பெண், நாங்கள் கூறும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அழகிய கட்டுடலாக உங்கள் உடம்பு மாறும். உங்களின் ஆடை யில்லாத புகைப்படங்களை அனுப்பினால் அதற்கேற்ப உடல் பயிற்சிகளை பரிந்துரை செய்வோம் என தெரிவித்துள்ளார்.
உடல்பயிற்சி வல்லுநர் என நம்பிய சில பெண்கள் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். பதிலுக்கு சில உடற்பயிற்சி குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். இதனால் பலரும் நம்பி தங்களின் நிர்வாண படத்தை அனுப்பி உடற்பயிற்சி ஆலோசனைகளை பெற்றுள்ளனர். அதேவேளையில், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடியில், உங்களின் அந்தரங்க புகைப்படம் என்னிடம் உள்ளது. எனது எண்ணுக்கு வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டும் என சில பெண்களை ஒரு நபர் மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண்கள் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அப்போது உடல்பயிற்சி வல்லுநர் பெண் போல பேசி பெண்களின் நிர்வாண போட்டோக்களை பெற்று, மிரட்டியது ஒரு ஆண் என தெரியவந்தது. முத்தியால்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான திவாகர் (22) இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு பெண்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
திவாகர் செல்போனில் பல பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பெண்களை மிரட்டி இதுவரை அவர் எவ்வளவு பணம் பறித்துள்ளார்..? வேறு வகையில் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி சீண்டியுள்ளாரா..? என விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு கூறும்போது, டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் பெரும்பாலும் போலியான பெண்கள் பெயரில் கணக்கு உருவாக்குகின்றனர். போலி புகைப்படத்தை பதிவேற்றம் செய்து பல ஆண்கள்,பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.
உண்மையான நபர்தான் இந்த செயலிகளை பயன்படுத்துகிறார் என பொதுமக்களால் எளிதில் கண்டறிய முடியாது. இதுபோன்ற போலியான கணக்குகளை நம்பி அந்தரங்க புகைப்படத்தையோ, பணத்தையோ, முக்கிய ஆவணங்களையோ அனுப்பி பொதுமக்கள், பெண்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil