scorecardresearch

புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்; ‘எங்கிருந்து நிதி வரும்’: நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் அறிவித்த நிலையில், அதற்கு மாதம் ரூ.10 கோடி தேவை. அந்த நிதி எங்கிருந்து வரும் என்று தெரியவில்லை என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Puducherry: Former chief minister N Rangaswamy press meet Tamil News
Puducherry Former Chief Minister N Rangaswamy press meet

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கவர்னர் உரை என்பது கடந்த ஆண்டின் சாதனை, எதிர்கால செயல்பாடுகளை கோடிட்டு காட்டுவதாக இருக்க வேண்டும். புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசை சௌந்தராஜன் ஆற்றிய உரை பொறுப்பற்ற உரையாகவும், உப்பு சப்பில்லாததாகவும் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டை ஆளும் கட்சியினர் பாராட்டி வருகின்றனர். கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரத்து 900 கோடிக்கு போடப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடியைத் தான் அரசு செலவு செய்துள்ளது. இதற்கு நிதி பற்றாக்குறைதான் காரணம்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்யும் திட்டங்களுக்கான நிதி ரூ.267 கோடி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சிறப்புக்கூறு நிதியில் ரூ.166 கோடி நிதி செலவு செய்யவில்லை. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.11 ஆயிரத்து 600 கோடியில் ரூ.9 ஆயிரம் கோடி சம்பளம், ஒய்வூதியம், மின்சார கொள்முதல், மானியம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும். மீதமுள்ள ரூ.2 ஆயிரத்து 600 கோடியில் ரூ.ஆயிரத்து 100 கோடி கூட்டுறவு மானியமாக சென்றுவிடும். எஞ்சிய தொகையில்தான் சாலை, குடிநீர், பராமரிப்பு வசதிகளை செய்ய வேண்டும்.

கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் நல்ல திட்டம்தான். இதற்கு நிதி எங்கிருந்து வரும்? என குறிப்பிடவில்லை. குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம்தான் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த ஆண்டு ரூ.260 கோடி குடிமைப்பொருள் வழங்கல்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு இலவச அரிசி உட்பட அனைத்து திட்டங்களுக்கும் சேர்த்து ரூ.14 கோடி குறைத்து ரூ.246 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிலிண்டருக்கு மாதம் ரூ.10 கோடி தேவை. இதற்கு எங்கிருந்து நிதி வரும்? முதலமைச்சர் எப்படி செயல்படுத்த முடியும்?

தொழில்துறைக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி அறிவித்தனர். ஆனால் கடந்த ஆண்டு தொழில்துறைக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கினர். நடப்பாண்டு ரூ.13 கோடி குறைத்து ரூ.74 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் அறிவித்த 50 திட்டங்களில் ஒன்றைக்கூட அரசு நிறைவேற்றவில்லை. பெண்களுக்கான இலவச பஸ் பயணம் வரவேற்புக்குரியது. சாலை போக்குவரத்து கழகத்தில் பஸ்களே இல்லை. இருப்பது ஓட்டை, உடைசல் பஸ்கள்தான். நடப்பாண்டில் சாலை போக்குவரத்து கழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. இதேபோல முன்னுக்கு பின் முரணாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் இதை ஏமாற்றும் பட்ஜெட் என்று கூறுகிறோம்.

மூடப்பட்ட ஆலைகளை திறப்போம் என என்ஆர்.காங், பாஜக தேர்தல் அறிக்கையில் கூறினர். தற்போது பட்ஜெட்டில் மாற்று ஏற்பாடு செய்வோம் என கூறுகின்றனர். என்ன ஏற்பாடு? தனியாருக்கு தாரை வார்ப்பதுதான் மாற்று ஏற்பாடா? சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவே அறிவித்துள்ளனர். இதில் மெகா ஊழல், பெருமளவு தொகை கைமாற வாய்ப்புள்ளது. சுற்றுலா பயணிகளிடம் போக்குவரத்து போலீசார் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். புதுவைக்கு வரும் பயணிகள் மனம் நொந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது.

ஓட்டல்கள், உணவகத்தில் கலப்படம் நடக்கிறது. இதை கண்காணிக்கவோ, தடுக்கவோ அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எங்கள் ஆட்சியில் புதுவை மாநில வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. தற்போது இது குறைந்து 5 சதவீதமாக உள்ளது. படித்த இளைஞர்களை மாடுமேய்க்க ரங்கசாமி சொல்கிறார். வேலைவாய்ப்பு தர வழியில்லை. 10 ஆயிரம் காலி பணியிடங்களை அரசு நிரப்பும் என ரங்கசாமி மார்தட்டுகிறார். புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு ஊழியர் சம்மேளனம் மூலம் எனக்கு கிடைத்துள்ளது. தலைமை செயலாளர், செயலாளர், அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என முதலமைச்சர், அமைச்சர்கள் புலம்புகின்றனர். உங்கள் ஆட்சிதானே நடக்கிறது. அவர்களை மாற்ற வேண்டியதுதானே? நாங்கள் அதிகாரத்திற்கு போராட்டம் நடத்தினோம். அதிகாரிகளை மாற்ற முடியாவிட்டால் பதவியில் ஏன் நீடிக்கிறீர்கள்? பதவி விலக வேண்டியதுதானே?

கடந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் விசாரணை நடத்துங்கள். விசாரணையில் ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள். ரெஸ்டோ பார் அனுமதி வழங்க ரூ.20 லட்சம் கைமாறுகிறது என பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். இதன் மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணித்துறையில் 13 சதவீதம் கமிஷன் பெறுகின்றனர். இவற்றை பகிரங்கமாக கூறியும் சொரணை இல்லாத அரசு பதில்கூட தெரிவிக்காமல் உள்ளது. ஊழல், முறைகேடுகள் தொடர்பாக விஜிலென்ஸ் தலைவரான தலைமை செயலரிடமும், மத்திய விஜிலென்ஸ் துறைக்கும் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry former chief minister n rangaswamy press meet tamil news