புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், " தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுகொண்டால் மட்டுமே நிதி தருவோம் என மமதையுடன் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மும்மொழி கொள்கை மூலம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இந்தி திணிப்பை கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்து வருகிறது.
மோடி அரசு ஏதோச்சி அதிகாரம், சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது. இதனால் தமிழ் மக்கள் கொதித்தெழுந்துள்ளனர். தமிழக அரசு மும்மொழி கொள்கையை எதிர்க்கிறது. ஆனால் புதுச்சேரி அரசு இதை ஏற்று கொண்டுள்ளது.
தானாம்பாளையம் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
காவல்துறை சுதந்திரமாக செயல்படவிடாமல் முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் தலையீட்டால் காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சரால்தான் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஓடும் வண்டியா? ஓடாத வண்டியா என தெரியும்." என்று தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.