/indian-express-tamil/media/media_files/2025/04/12/AWbIh9zlPLr8j6PYbMC3.jpg)
அமித்ஷா அழுத்தம் கொடுத்தே எடப்பாடியை கூட்டணியில் சேர வைத்திருகிறார். இது சந்தர்ப்பவாத கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி, இந்த கூட்டணியில் தமிழ்நாடு மக்களுக்கு எந்த பயனும் இல்லை" என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கடுமையான விமர்சித்துள்ளார்
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி, சிறுபான்மையினர் துறை சார்பில், இஸ்லாமிய மக்கள் நலனுக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ திரும்பபெற வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் தலைவர் முஹம்மது ஹசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல். ஏ. உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி இளைஞரணி என அனைவரும் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்தப் போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், "சென்னைக்கு வருகை புரிந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்திருக்கிறார், இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. பா.ஜ.க-வோடு ஒருபோதும் சேர மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி பலமுறை தெரிவித்து இருந்தார்,
பா.ஜ.க கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியே வந்த போது கூட இனிமேல் பா.ஜ.க-வோடு அ.தி.மு.க ஒரு போதும் கூட்டணி வைக்காது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை வந்த அமித்ஷா எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து கூட்டணியில் சேர வைத்திருகிறார். இது சந்தர்ப்பவாத கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. இந்த கூட்டணியால் தமிழ்நாடு மக்களுக்கு எந்த பயனும் இல்லை,
பா.ஜ.க அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தேவையான நிதி வழங்கவில்லை, மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு என மக்கள் விரோத திட்டங்களை கொண்டு வருகிறார்கள், ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு பா.ஜ.க அநீதி செய்கிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை, இந்த தேர்தலோடு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க விழுங்கி விடும். தமிழகத்தில் அ.தி.மு.க பலவீனம் ஆக்கப்படும், கட்சி உடையும், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வரவேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அவர்களுடைய கனவுகள் பலிக்காது, மக்கள் பா.ஜ.க-வை புறக்கணித்து இருக்கிறார்கள். இது நாடாளுமன்ற தேர்தலில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒன்று சொல்வார் நாளை ஒன்று சொல்வார் எனவே அவர் பேசுவதெல்லாம், பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அண்ணாமலை இருக்கும்போது பாரத ஜனதா கட்சியை கொஞ்சம் மேலே கொண்டு வந்தார். யார் விசுவாசமாக இருக்கிறார்களோ அவர்களை காலி செய்வதுதான் பா.ஜ.க-வுடைய வேலை" என்று அவர் கூறினார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.