புதுச்சேரியில், சிறுமி மீது நடத்தப்ட்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ரங்கசாமி,கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்
புதுச்சேரி காங்., ஊசுடு தொகுதி சார்பில், ஆளும் என்.ஆர். காங்., மற்றும் பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து பாதயாத்திரை சென்றனர். சேதராப்பட்டில் துவங்கிய பாதயாத்திரை கரசூர், துத்திப்பட்டு, தொண்டமாநத்தம், பத்துக்கண்ணு வழியாக கூடப்பாக்கம்சென்றடைந்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் சுப்ரமணியன், ஆனந்தராமன், தேவதாஸ், இளையராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,நகரம் மற்றும் கிராம பகுதியில் வீதிக்கு வீதி ரெஸ்ட்ரோ பார்கள் திறந்துள்ளதால், மக்கள் நிம்மதியாக வாழ முடியாமல் சிரமப்படுகின்றனர். விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நமது மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு கொடுமை படுத்துகின்றனர்.
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்களை எல்லாம் பொது மக்களுக்கு எடுத்துக் கூறி, தொகுதி தோறும் பாதயாத்திரை, பொதுக்கூட்டம் நடத்தி வருகிறோம்.மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வரும் சட்டசபை தேர்தலில் காங்., தலைமையில் மீண்டும் ஆட்சி அமைப்போம். சிறுமி பாலியல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.