/indian-express-tamil/media/media_files/2025/03/07/pX3AzBvyiVs4Q4rMNYvO.jpg)
புதுச்சேரி பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் பாதுகாப்பு இல்லாத நிலையில் விநியோகம் செய்யப்படுகிறது. அமிலத்தன்மை மற்றும் நுவர்ப்பு தன்மை அதிகமாக குடிநீரில் இருக்கின்ற காரணத்தால் அந்த தண்ணீரை குடித்துவிட்டு மக்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. என இன்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இந்திய சுதந்திரத்தை 79வது ஆண்டு கொண்டாடும் விதமாக டெல்லியில் செங்கோட்டையில் அவர் சுதந்திர தின உரை நிகழ்த்தும்போது அதில் வீர சவர்க்கர் அவர்களைப் பற்றி அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று அவருடைய பெயரை நினைவுகூர்ந்து பேசினார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அண்ணல் காந்தியடிகள் தலைமையிலே பண்டிதர் நேரு, சர்தார் வல்லபாய் பட்டேல், மௌலானா ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், டாக்டர் அன்னிபெசன்ட் போன்ற தலைவர்கள் பல போராட்டங்களை நடத்தி சிறைக்குச் அனுப்பப்பட்டு அவர்களுடைய போராட்டத்தின் விளைவாக இந்தியா சுதந்திரம் அடைந்தது.
இது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். வீர சவர்க்கர் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆங்கில ஏகாபத்தியம் அவரை அந்தமான் நிக்கோபார் சிறையில் அடைத்த போது வெள்ளைக்காரர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று அதில் குறிப்பிட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ஆகவே மோடி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு நன்றி விசுவாசமாக இருப்பதற்காக வீர சவர்க்கர் அவர்களைப் பற்றி தன்னுடைய உரையில் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது.
நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் இந்திய சுதந்திர வரலாற்றை மாற்றியமைக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மோடியின் இந்த பேச்சு சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்தவர்கள் உயிர் நீத்தவர்கள் இவர்களையெல்லாம் அவமதிக்கும் செயலாகும். ஆகவே மோடியின் உரை கண்டனத்துக்குரியது. தமிழ்நாட்டில் தொடர்ந்து புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கபிரிவுத்துறை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களையும் அமைச்சர்களையும் குறிவைத்து அவர்களுடைய வீடுகளில், அலுவலங்களில் சோதனை செய்து அவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் வேலையை செய்து வருகிறார்கள்.
இது திட்டமிட்டு பாரதிய ஜனதாவின் திராவிட முன்னேற்ற கழக தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கை. தேர்தல் நடக்கும் சமயத்தில் இதே வேலையை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்களை குறி வைத்து அவர்களுடைய வீடுகள் எல்லாம் ரெய்டு செய்யப்பட்டது. அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் நடைபெற்றது. மேற்கு வங்காளத்திலும் மம்தா பானர்ஜினுடைய அமைச்சர்கள் மேல் குறி வைத்து மத்திய பாஜக அரசு இந்த அமைப்புகளை ஏவி விட்டு பொய் வழக்குகளை போடுகிறார்கள்.
இது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களில் சிபிஐ, வருமானவரித்துறை,அமலாக்க பிரிவு துறை ஒன்றும் செய்வதில்லை. புகார்கள் வந்தால் கூட அதை ஓரம் கட்டுகிறார்கள். மத்திய பாஜக அரசின் கைப்பாவைகளாக இந்த அமைப்புகள் மாறிவிட்டன. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊழல் புகார்கள் வந்தாலும் கூட இவர்கள் கண்டு கொள்வதில்லை.
புதுச்சேரி மாநிலத்தில் கூட தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் முதலமைச்சர் ரங்கசாமி மீதும் அமைச்சர்களின் மீதும் ஆதாரத்தோடு கொடுத்தாலும் கூட அமலாக்க பிரிவு துறையும் மற்றும் சிபிஐயும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவைகளை எல்லாம் பாஜகவின் உடைய அடிமைகளாக செயல்படுகின்றன. விரைவில் காலம் மாறும் காட்சிகளும் மாறும். இந்த அமைப்பில் உள்ள பொறுப்பாளர்கள் இவர்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் தொடர்பாக இன்று திரு. ஐ. பெரியசாமி அமைச்சர் அவர்கள் மீது திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்களுடைய வீடுகளிலும் அலுவலகங்களும் சோதனை செய்யப்பட்டிருக்கிறது. இந்திய கூட்டணி தலைவர்கள் இதுபோன்ற பாரதிய ஜனதா கட்சியின் மிரட்டல் வேலைகளை கண்டு அஞ்ச மாட்டார்கள்.திராவிட முன்னேற்ற கழகமும் மோடி அரசை எதிர்த்து அதன் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டிப்பாக துணிந்து எதிர்கொள்ளும். புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கு புதுச்சேரி மாநிலத்திற்கு வரும்போது பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
அது மட்டுமல்ல பல இடங்களை சுற்றி பார்க்கும்போது அவர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்பும் சுற்றுலா பயணிகளுக்கு கொடுப்பதில்லை.
சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் திரும்பி போகிறார்கள் என்று ஏனோதானோ என்று சுற்றுலா துறையும் காவல் தறையும் செயல்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 3 இன்ஜினியர்கள் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள கடலில் குளித்த போது கடலில் இழுத்துச் சென்று பரிதாபமாக உயிரிழந்தார்கள். எங்கள் ஆட்சி காலத்தில் கூட அதே இடத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
அதற்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அது தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு வைத்து லைஃப் கார்டுகளை வைத்து பாதுகாப்புகள் கொடுத்தோம். ஆனால் ஏன் இவர்கள் இந்த அபாயகரமான கடல் பகுதியில் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதித்தார்கள். சுற்றுலா பயணிகளுக்கு ஒன்றும் தெரியாது. அங்கிருந்து லைஃப் கார்டுகள் எங்கே சென்றார்கள். பரிதாபமாக மூன்று உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதற்கு சுற்றுலா துறையும் அந்த துறையினுடைய அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும்.
அது மட்டுமல்ல நகரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வரும்போது அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. காவல்துறை சரியாக கண்காணிப்பதில்லை. சுற்றுலா பயணிகள் மிரட்டப்படுகிறார்கள். அது மட்டும் அல்லாமல் காவல்துறையானது போக்குவரத்து மீறல் என்ற போர்வையில் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதுச்சேரிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் உள்ள முக்கியமான இடங்களை பார்த்துவிட்டு நிம்மதியாக தங்கி விட்டு பாதுகாப்பாக திரும்பி செல்லும் சூழ்நிலையை சுற்றுலா துறையும் இந்த அரசும் ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் புதுச்சேரி மாநில நிர்வாகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை தன்மை இருக்காது.
புதுச்சேரி பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்களுக்கு விநியோகம் படுத்தப்படுகிறது. அமிலத்தன்மை மற்றும் நுவர்ப்பு தன்மை அதிகமாக குடிநீரில் இருக்கின்ற காரணத்தால் அந்த தண்ணீரை குடித்துவிட்டு மக்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஏற்கனவே நாங்கள் கூட முத்தியால்பேட்டை பகுதியில் 400 டி.டி.எஸ் ஆக இருக்க வேண்டிய குடிதண்ணீர் உடைய தன்மை 1400 மேல் இருந்த காரணத்தினால் இந்த அரசை எதிர்த்து போராட்டத்தினை நடத்தினோம். ஆனால் இந்த ஆட்சியாளர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்பு கூட முருங்கபாக்கத்தில் குடிநீரில் கழிவு நர் கலந்து அந்தத் தண்ணீரை குடித்தவர்கள் வாந்தி பேதியால் அவதிப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் கொடுக்க வேண்டியது இந்த அரசினுடைய கடமை. குடிதண்ணீர் திட்டத்திற்காக மத்திய அரசிடம் இருந்து மானியம் வாங்குகின்ற இந்த அரசு அந்த பணத்தை முறையாக செலவு செய்யாமல் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் பாதுகாப்பற்ற குடிநீர் மக்களுக்கு கொடுப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
உடனடியாக பொதுப்பணித்துறை குடிநீர்பிரிவுதறை இவைகள் ஒருங்கிணைந்து புதுச்சேரி நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உடனடியாக கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.