scorecardresearch

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் நீட் தேர்வு ரத்து: நாராயணசாமி உறுதி

நீட் தேர்வில் என்.ஆர்.காங்கிரஸ் நிலை குறித்து ரங்கசாமி விளக்க வேண்டும்; முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

Narayanasamy
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இதையும் படியுங்கள்: 2 நாட்கள் சுற்றுப்பயணம்: புதுவை வருகை தரும் குடியரசு தலைவர் முர்மு; முதல்வர் ரங்கசாமி தகவல்

தமிழகத்தில் மட்டும் சுமார் 30க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். புதுவையில் மாணவர் ஹேமசந்திரன் தற்போது தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். மத்திய அரசு கண்டிப்பாக நீட் தேர்வை நடத்துவோம் என்ற அடாவடித்தனத்தின் காரணமாக மாணவ மாணவிகள் தற்கொலை தொடர்கதையாக இருக்கிறது.

மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு, ஹேமச்சந்திரன் உட்பட தமிழகத்தில் தற்கொலை செய்து இறந்த மாணவ மாணவிகள் உடைய இறப்பையும் கருத்திலே கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

அது மட்டுமல்ல புதுவை மாநில முதலமைச்சர் ரங்கசாமி மாணவர் ஹேமச்சந்திரன் இறந்த விஷயத்தில் மவுனம் காக்கிறார். நீட் தேர்வை பற்றி என்.ஆர். காங்கிரஸின் நிலை குறித்து ரங்கசாமி விளக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.க ஆட்சியும், புதுவை பா.ஜ.க.,வும் அதன் தலைவர்களும் ஹேமச்சந்திரன் தற்கொலைக்கு புதுவை மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

முதலமைச்சர் ரங்கசாமி புதுவை மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அவரது கூட்டணியில் இருக்கின்ற பா.ஜ.க பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதி புதுவை மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் ரங்கசாமி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டமன்ற வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை எல்லாம் காற்றிலே பறக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஆட்சி புதுவை மாநிலத்தில் இருக்கிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து இன்று மக்களை வஞ்சிக்கின்ற அரசாக செயல்பட்டு வருகிறது. என்.ஆர் காங்கிரஸ்- பா.ஜ.க கூட்டணி ஆட்சி வெகு காலம் நீடிக்காது என்பது உறுதி. இவ்வாறு நாராயணசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கழிவுநீர் சீரமைப்பு பணி; நேரு எம்.எல்.ஏ ஆய்வு

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட இளங்கோநகர் வார்டு, சாந்தி நகர், ஒன்றாவது தெரு, 2வது தெரு, 3வது தெருக்களில் கழிவுநீர் ரோட்டில் வழிந்து, மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெளியேறியது.

இதுதொடர்பாக, அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ நேருவிடம் புகார் அளித்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை கழிவுநீர் உட்கோட்ட   பிரிவு அலுவலகத்தில் எம்.எல்.ஏ புகார் தெரிவித்து சீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இந்த பணிகளை நேரு எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவு நீர் தொட்டியில் அடைப்பு ஏற்படாதவாறு சரி செய்யும்படி பணிபுரிந்த ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry former cm narayanasamy says neet exam will be cancelled when congress form govt in center

Best of Express