பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
Puducherry | Narayanasamy: புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (வியாழக்கிழமை) அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
3 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. நிச்சயமாக 7 கட்ட தேர்தல் முடிந்ததும் இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தல்களிலும் தேர்தல் துறை பல முயற்சிகளை எடுத்தும் வெப்பம் காரணமாக எதிர்பார்த்த வாக்கு சதவீதம் உயரவில்லை.
பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது முன்னுக்கு பின் முரணான கருத்துகளை பேசி வருகிறார். பிரதமர் என்ற நிலையில் இருந்து இறங்பி வந்து காங்கிரஸ் கட்சியை தரம் தாழ்ந்து பேசுகிறார். பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் தாலியை கூட இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என பேசி வருகிறார். இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் குழம்பி போய் இருக்கிறார். இந்தியா கூட்டணி தலைவர்கள் அமர்ந்து பேசி யார் பிரதமராக வர வேண்டும் என முடிவு எடுப்பார்கள்.
ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. புதுச்சேரியில் கல்வித்துறையில் மாணவர்களின் நலனுக்காக காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்கும் வேலையை முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்து வருகின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நீட் தேர்வை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால் தற்போது செவிலியர் படிப்புக்கும் நீட் தேர்வை கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி கடந்த 3 ஆண்டுகளை தாண்டியுள்ளார். இந்த 3 ஆண்டுகளில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணி ஆட்சியின் சாதனை பூஜ்ஜியம் தான். முதியோர் பென்ஷனை 500 ரூபாய் உயர்த்தி கொடுத்தது தான் இவர்களின் சாதனை.
இது ஊழல் நிறைந்த ஆட்சி என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். 3 ஆண்டுகால சாதனை புதுச்சேரி மக்களை வஞ்சித்தது தான்.
கல்வித்துறை அமைச்சர் கல்வித்துறையின் குறைபாடுகளை சரி செய்யாததால் தான் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் புதுச்சேரியில் குறைவுக்கு காரணம். முதலமைச்சரும், கல்வி அமைச்சரும் தான் இதற்கு முழு பெறுப்பேற்க வேண்டும்.
புதிய கல்வி கொள்கையானது நம் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால் இவர்கள் கொண்டு வரும் திட்டத்தால் 5, 7, 9-ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடைபெறும். சிறு வயதிலேயே பொதுத்தேர்வு எழுத வைத்து அவர்களின் படிப்பை குறைக்க நினைக்கிறார்கள். எனவே இதனை இங்கு கொண்டுவர காங்கிரஸ் எதிர்த்து போராடுவோம்
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“