புதுச்சேரியில் வரி கணக்கை குறைத்து காட்ட லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை அதிகாரிகள் இருவர் உட்பட 4 பேரை சி.பி.ஐ.,யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் அருகில் வணிக வரித் துறை அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.இந்த நிலையில், புதுச்சேரி வணிகவரித் துறை அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரி முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை இரவு வந்து திடீா் சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையானது சனிக்கிழமை மாலை வரை நீடித்தது.
அப்போது, அங்கிருந்த வணிகவரி உதவி அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம், வரி ஆலோசகா் ராதிகா, தனியாா் கம்பெனி தொழில்சாலை உரிமையாளா் சோலை செல்வராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.இதில், புதுச்சேரியை அடுத்த அரியூரில் தொழிற்சாலை நடத்தும் சோலை செல்வராஜ் வரி ஏய்ப்பு செய்திருந்ததும், இதை சரி செய்ய சாரம் பகுதியைச் சோ்ந்த வரி ஆலோசகா் ராதிகா மூலம் வணிகவரித் துறை அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம் ஆகியோரிடம் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது. மேலும், அதற்கான கைப்பேசி உரையாடல்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினா்.
இதையடுத்து, வணிக வரி உதவி அதிகாரிகள் ஆனந்தன், முருகானந்தம், வரி ஆலோசகா் ராதிகா மற்றும் தனியார் கம்பெனி உரிமையாளா் சோலை செல்வராஜ் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதையடுத்து, நால்வரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், அனைவரும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“