புதுச்சேரியில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisment
புதுச்சேரியில் கடந்த மூன்று நாட்களாக வரலாறு காணாத வெயில் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கத்திரி வெயில் முடிந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையவே இல்லை. கடந்த மூன்று நாட்களாக வெயில் மிகவும் கடுமையாக இருந்தது.
வருகின்ற ஏழாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த வெயிலால் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது என பெற்றோர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏழாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்தும் வருகின்ற 14 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று மாலை 5.45 மணிக்கு துவங்கிய மழை 6:45 வரை சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இடியும் மின்னலும் மிக அதிகமாக இருந்ததால் மழையின் வேகம் குறைந்து விட்டது. இடியும் மின்னலும் இல்லாமல் இருந்திருந்தால், மழையின் வேகம் அதிகரித்திருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த ஒரு மணி நேரம் பெய்த மழை வெப்பத்தின் தாக்கத்தை சற்று குறைந்துள்ளது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil