ஜிப்மர் மருத்துவமனை பாதுகாப்பு அதிகாரி தங்கும் அறையில் இருந்து ஆப்பிள் லாப் - டாப், ஐ பேட் உள்ளிட்ட விலை உயர்ந்த மின்னனு பொருட்களை டிப்-டாப் ஆசாமி ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்தவர் சதிஷ் (34). தனியார் நிறுவனம் மூலமாக ஜிப்மர் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் அவருக்கு மருத்துவமனை வளாகத்திலயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் தங்கி அவர் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 8 ஆம் தேதி அன்று அறையை பூட்டி விட்டு பணிக்கு சென்றுவிட்டு மாலை மீண்டும் அறைக்கு வந்துள்ளார்.
அப்போது அவரது அறையில் இருந்த ஆப்பிள் லாப் - டாப், ஐபேட், உள்ளிட்ட சில விலை உயர்ந்த மின்னனு சாதனங்கள் மாயமாகி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் மாஸ்க் அணிந்து கொண்டு டிப் டாப் ஆசாமி ஒருவர் சதிஷின் அறையில் இருந்து பையுடன் வெளிவருவதும் பின்னர் ஜிப்மர் வளாகத்தில் நடந்து செல்வதும் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை கொண்டு சதிஷ் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விலை உயர்ந்த மின்னனு சாதனங்களை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“