/indian-express-tamil/media/media_files/2025/10/12/puducherry-2025-10-12-17-10-10.jpg)
Puducherry
புதுச்சேரி அரசு இந்த ஆண்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கும் தீபாவளி ஊக்கத் தொகையை (போனஸ்) அதேபோல அமைப்பு சாரா மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:
80% தொழிலாளர்கள் அமைப்பு சாரா பிரிவினர்:
புதுச்சேரி மாநிலத்தில் வாழும் தொழிலாளர்களில் சுமார் 80 சதவீதத்தினர் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடைப் பணியாளர்கள், சிறு தொழில் பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், தையல் கைவினைஞர், மண்பாண்டத் தொழிலாளர், சாலையோர வியாபாரிகள் உட்பட 26-க்கும் மேற்பட்ட பிரிவினர் இதில் அடக்கம். இவர்களின் பணியே மாநில மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை ஈட்டி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறது. இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு துணை நிற்க வேண்டும்.
கடந்த ஆண்டு போனஸ் வேறுபாடு:
சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 5,000/- ஊக்கத்தொகையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ. 1,500/- மட்டுமே புதுச்சேரி அரசு வழங்கியது. இந்த வேறுபாடு கூடாது என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
அன்றைய ஆட்சியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர் வாரியத்திற்கான நிதி, மாநிலத்தில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் விதிக்கப்படும் 1% செஸ் வரியிலிருந்து வழங்கப்படுகிறது என்றும், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்திற்கு நிதி ஆதாரம் இல்லை என்றும் பதிலளித்தனர்.
சமமான ஊக்கத்தொகை கோரிக்கை:
தற்போது, அமைப்பு சாரா நலச் சங்கம் என்பது வாரியமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ரூ. 6,000/- தீபாவளி ஊக்கத்தொகையை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்.
நிதியை உருவாக்க ஆலோசனை:
எதிர்காலத்தில் இதற்காக தனியாக நிதியை உருவாக்க, புதுச்சேரியில் உள்ள மதுபான விற்பனை, பெட்ரோல், டீசல் விற்பனை போன்றவற்றில் ஒரு சதவீதம் செஸ் வரி விதித்து அதற்கான நிதியை உருவாக்கலாம் என்ற ஆலோசனையை அரசுக்கு முன்வைக்கிறேன்.
சேமிப்பில் உள்ள நிதியைக் கடனாகப் பயன்படுத்தக் கோரிக்கை:
தற்போது கோடிக்கணக்கான ரூபாய் கட்டுமான நல வாரியத்தில் சேமிப்பாக உள்ளது. அதனை கடனாகப் பெற்றாவது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ. 6,000/- பண்டிகைக் கால போனஸ் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ. 6,000/- வழங்க வலியுறுத்தல்:
விவசாயத் தொழிலாளர் நலச் சங்க உறுப்பினர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் சட்டசபையில் ரூ. 5,000/- கொடுப்பதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு இன்று வரை கிடப்பில் உள்ளது. இதனிடையே, சென்ற வாரம் வேளாண் அமைச்சர் இவ்வாண்டு ரூ. 2,000/- தீபாவளி பண்டிகை போனஸ் அளிப்பதாக அறிவிப்பு செய்திருக்கிறார். அதனையும் ரூ. 6,000/- ஆக உயர்த்தி, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சிறப்பாக தீபாவளியைக் கொண்டாட இவ்வரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கேட்டுக் கொண்டார்.
- பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.