நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 6-வது சம்பளக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி பாசிக் ஊழியர்கள் கடந்த 17-ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பாசிக்கில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களை அழைத்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது.
இன்று 15-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்கிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பெரியார் சிலை அருகே இன்று(மே 4) காலை ஒன்று கூடினர். அங்கிருந்து சட்டசபையை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், தலைவர் தினேஷ் பொன்னையா முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி, கோவிந்தாராசு, மகேந்திரன், மாணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குணசீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ணமூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை நோக்கி வந்தது. ஆம்பூர் சாலை சந்திப்பில் போலீசார் பேரிகார்டு அமைத்து பாசிக் ஊழியர்களை தடுத்தனர். ஊழியர்கள் பேரிகார்டுகளை மீறி தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேதுசெல்வத்தை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். ஊழியர்கள் சட்டசபைக்கு செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் ஊழியர்கள் மற்றொரு சாலை வழியாக ஆம்பூர் சாலைக்கு சென்று போலீஸ் வேன் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார், தொழிற்சங்கத்தினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது.
பின்னர், மறியலில் ஈடுபட்ட பாசிக் ஊழியர்களை போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி நடைபாதையில் அமரவைத்தனர். அங்கு தொடர்ந்து கோஷம் எழுப்பிபடி தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“