/indian-express-tamil/media/media_files/2025/01/30/3fL7O4xdSLIEtoFmRKHD.jpg)
புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36 வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று(30.01.2025) நடைபெற்றது.
இந்தியாவில் 4.6 லட்சம் சாலை விபத்துகள் நடக்கிறது அதனால் 1.68 லட்சம் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் நடக்கிறது இதில் 19 பேர் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது என இன்று நடந்த சாலை பாதுகாப்பு விழாவில் புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு, போக்குவரத்து துறை சார்பில் 36 வது தேசிய போக்குவரத்து மாத நிறைவு விழா கம்பன் கவியரங்கத்தில் இன்று(30.01.2025) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார்.
சாலைப் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும், சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்திய காவலர்கள், வழிப்புணர்வு எற்படுத்திய நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள் - மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடத்திட்டம் சம்பந்தமான வீடியோக்களை பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்தார். முன்னதாக, ஆட்டோமேடிக் பிரேக் சிஸ்டத்தை வடிவமைத்த ஆச்சாரியா பள்ளி மாணவிகளின் செயல் விளக்கத்தைப் பார்வையிட்டு பாராட்டினார்.
முதலமைச்சர் ந. ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் R. செல்வம், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பள்ளி மாணவ-மாணவிகள் விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் பேசியதாவது:
2025-ம் ஆண்டு சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், புதுச்சேரி போன்ற வாகன நெரிசல் அதிகம் உள்ள இடத்தில் “சாலைப் பாதுகாப்பு“ பற்றி பேசுவது அவசியமானது. தேசிய அளவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்புகள் அதிகம் உள்ள மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று.
சாலைப் பாதுகாப்பு என்பது சட்டங்களை, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது மட்டும் அல்ல. அதையும் தாண்டி, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கிறது. விபத்துகளைத் தடுப்பது, மனித உயிர்களைப் பாதுகாப்பது, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது… இதையெல்லாம் உள்ளடக்கியது.
இந்த நிகழ்ச்சியை, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்கக் கூடாது. சாலைப் பாதுகாப்பு நடைமுறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு முயற்சியாக பார்க்க வேண்டும். அதை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப் படுகிறது.
சாலைப் பாதுகாப்பு பற்றி ஒவ்வொரு ஆண்டும் நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம். அதைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். ஆனாலும், சுமார் 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சாலை பாதுகாப்பை உறுதி செய்வது என்பது ஒரு சவாலான பணிதான். நம்முடைய கூட்டு முயற்சியால் மட்டுமே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி, விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் குறைக்க முடியும்.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக் கணக்கான பேர் சாலை விபத்தில் உயிர் இழக்கிறார்கள். பலர் ஊனம் அடைகிறார்கள். அதனால் சாலை பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்தமான சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒன்று.
சமீபத்திய ஒரு அறிக்கைப்படி நமது நாட்டில் 4.6 லட்சம் சாலை விபத்துகள், அதனால் 1.68 லட்சம் உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. சராசரியாக, ஒரு மணி நேரத்திற்கு 53 விபத்துகள் 19 உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. துர் அதிஷ்ட வசமாக, இதில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர், பாதசாரிகள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். புதுச்சேரியில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 விலை மதிப்பு இல்லாத உயிர்களை நாம் இழக்கிறோம் என்பது வருத்தமாக இருக்கிறது.
போக்குவரத்து விதிமீறல், ஓட்டுனரின் திறமை இன்மை, வாகனத்தில் குறைபாடு, சாலை விபத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, குண்டும் - குழியான சாலை இவையெல்லாம் இதற்கு காரணம்.
இவற்றை எல்லாம் நாம் சரி செய்ய வேண்டும் என்றால் அனைத்து துறைகளும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இதில் அரசு துறைகள் மட்டும் அல்லாமல் தனியார் துறையும் பொதுமக்களும் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். எல்லாருடைய ஒன்றுபட்ட செயல்பாடு மட்டுமே விபத்துகளை, அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை கணிசமாக குறைக்கும்.
புதுச்சேரி காவல்துறை, அண்மையில், சாலை விபத்துகளில் மரணம் இல்லா புதுச்சேரி இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் HELMET அணிய வேண்டியது அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஒரு ஆளுநராக மட்டும் அல்லாமல் தனி மனிதனாகவும் என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதால் அந்த இயக்கத்தின் தொடக்க விழாவில் நான் கலந்து கொண்டேன். அப்போது நான் குறிப்பிட்டு இருந்தேன். சாலை விபத்துகளால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். அது நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.
நான் முன்பே கூறியதைப் போல, சாலைப் பாதுகாப்பு என்பது மனித உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். மத்திய அரசின் வழிகாட்டலோடு புதுச்சேரி அரசு சாலைப் பாதுகாப்பை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கோடு, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டை வழி நடத்திக் கொண்டு இருக்கிறார்.
அதற்கு நம்முடைய ஒவ்வொருவரின் பங்கு அளிப்பும் அவசியம். “வளர்ச்சி அடைந்த பாரதம் 2047“ என்ற இலக்கை நாம் விரைவாக எட்ட வேண்டும் என்றால் நம்முடைய மனித வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். இதை போன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள், இளைஞர்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியை நாம் தீவரமாக எடுக்க வேண்டும். சாலை பாதுகாப்பு நடைமுறையில் மக்களின் பங்கும் பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. வாகனத்தை ஓட்டும்போது பொறுப்போடு சீட் பெட் அணிவது, ஹெல்மெட் அணிவது டிராஃபிக் சிக்னலை மதிப்பது, சாலை விதிகளை மதிப்பது, வேகக் கட்டுப்பாட்டை மதிப்பது எல்லாம் சாலைப் பாதுகாப்பை ஏற்படுத்தும். சாலைப் பாதுகாப்பு பற்றி நாம் இன்று எடுக்கும் நடவடிக்கை வளமான, வலிமையான பாரதத்தை, எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் என்பதை நான் இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்.
நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு இருந்தால் மட்டும் போதாது. நம்மை சுற்றி இருப்பவர்களையும் விழிப்பு அடைய செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக நாம் இருக்க வேண்டும். சிறுவர்களுக்கும் நம்முடைய நண்பர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக நாம் செயல்பட வேண்டும். நம்முடைய பாதுகாப்பு நம்மிடம் இருந்து தான் தொடங்குகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நம்முடைய நடைமுறையில் ஏற்படும் சின்ன சின்ன திருத்தம் தான் நல்ல மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் சாலை விபத்துகளை குறைக்க முடியும். விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க முடியும் என்று கூறி பரிசு மற்றும் விருதுகள் பெறும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லி எனது உரையை முடிக்கிறேன்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் சாலை விபத்தால் ஆண்டிற்கு 200 பேர் பலியாகவதாகவும், சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டுமென புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், 36-வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நம் உயிரை பாதுகாத்துகொள்ள வேண்டியது மிக அவசியம். சாலையை நன்றாக வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். நிறைய விபத்து சாலைகளில் உள்ள பள்ளத்தால் ஏற்படுகிறது. அதனை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.
வேகத்தடைகளில் முறையாக வர்ணம் பூசாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். புதுச்சேரி மாநிலம் மிகச்சிறிய மாநிலம். அதனால் 5 நிமிடத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம். அதனால் வாகனங்களில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் நிதானமாக வாகனங்களை இயக்க வேண்டும். சிறிய மாநிலமான புதுச்சேரியில் சாலை விபத்தில் ஆண்டிற்கு 200 பேர் பலியாகின்றனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் இழப்பு இல்லாமல் வாகனங்களை இயக்க வேண்டும். அதற்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.