Advertisment

நீட் பி.ஜி தேர்வில் ’பூஜ்ஜியம்’ கட் ஆஃப் குறித்து புரிதல் இல்லாமல் விமர்சிக்கிறார்கள் – தமிழிசை

நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி, அதை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு பூஜ்ஜிய கட் ஆஃப் குறித்த புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? – புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்

author-image
WebDesk
New Update
Tamilisai

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன்

மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல், தவறாக விமர்சிப்பவர்களுக்கு முதலில் “நீட்“ தேர்வு கட் ஆப் மதிப்பெண், “பூஜ்ஜியம் பர்சன்டைல்“ என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் வேண்டும், என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளதாவது;

நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல?

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை. நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம். இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை.

மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்ச பட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை. அத்தகைய இடங்கள் முழுமையான நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் புரிதல் மிக அவசியம்.

நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதை விமர்சிப்பவர்கள் இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம். இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனிடையே திருச்சி, “கிராமாலயா“ மற்றும் “டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா“ சார்பில் டெட்டால் பள்ளிச் சுகாதாரக் கல்வி நிகழ்ச்சி ஓட்டல் சன்வே மேனரில் இன்று (21-09-2023) நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரயங்கா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணைநிலை ஆளுநர், “கிராமலயா“ தாமோதரன் கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறங்களை மேம்படுத்துவதற்காக செய்துவரும் முயற்சிகளுக்காக சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் பெற்றார். அதற்காக என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக நினைவுகூர்வதற்கு காரணம், இதற்கு முன்பு பிரபலமானவர்கள் மட்டுமே பத்மஸ்ரீ விருது வாங்கிக் வந்தார்கள். ஆனால், இன்று பிறருக்கு சேவை செய்வதன் மூலம் அனைவரும் இந்த விருதைப் பெறமுடியும் என்பதற்கு தாமோதரன் போன்றவர்கள் உதாரணமாக இருக்கிறார்கள்.

2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் ‘ஸ்வச் பாரத்’ தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். அவர் பேசுகையில் “உங்களுக்கு சுதந்திரமான இந்தியா முதலில் வேண்டுமா? அல்லது சுகாதாரமான இந்தியா வேண்டுமா? என்று கேட்டால் எனக்கு முதலில் சுகாதாரமான இந்தியாதான் வேண்டும் என்பேன். ஏனென்றால் சுகாதாரமான இந்தியா தான் சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்.

‘ஸ்வச் பாரத்’ தூய்மை இந்தியா திட்டத்தை பாரதப் பிரதமர் முன்னெடுத்ததன் மூலம் கை கழுவாதது, குப்பைகள் சேருவது போன்றவற்றால் வரும் நோய்கள் தடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஏற்படவிருந்த 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு முதல் வருடத்திலேயே தடுக்கப்பட்டது.

‘சுத்தம் சோறு போடும்’ என்பது, சுத்தமாக இருந்தால் நோய் வராது; ஆரோக்கியமாக இருந்து நல்ல உணவினை உண்ண முடியும் என்பது தான் பொருள். ‘கந்தையானாலும் கசக்கி கட்டு’ போன்ற பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

தாமோதரன் அவர்களின் வாழ்க்கை மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது. ஒரு கல்லூரி மாணவராக ஒரு கிராமத்திற்கு செல்லும்போது அந்த கிராம மக்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைத்து தனது தீவிர முயற்சியால் அங்கே கழிப்பறை கட்டுவது, சுகாதார நடவடிக்கைகளில் பயிற்சி அளிப்பது, சுத்தமான கிராமத்தை உருவாக்குவது, கைத்தொழில் கற்றுக் கொடுப்பது போன்ற செயல்களை செய்திருக்கிறார். “கிராமாலயம்“ - என்று ஒரு கிராமத்தை கோயிலாக மாற்ற அவர் நிர்ணயித்திருக்கிறார்.

திருச்சியில் இருந்து வந்து இங்கு இந்த இயக்கத்தைத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியானது. தமிழகத்தில் எது வந்தாலும் நாங்கள் அதை எடுத்துக் கொள்வோம் என்பதை இது காண்பிக்கிறது.

சுயநலம் இல்லாமல் யார் நாட்டிற்காக பணியாற்றுகிறார்களோ அவர்களை அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு எது செய்தாலும்; அது வருங்காலத்துக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும். அதனால்தான் நேற்றைய தினம் துணைநிலை ஆளுநர் நிலையத்தில் “திறமை தேடல்“ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. உண்மையிலேயே அரசு பள்ளி மாணவர்கள் திறமையாக இருக்கிறார்கள்.

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 10% இடஒதுக்கீட்டை அரசு வழங்கியிருக்கிறது. நீட் ஆனது மாணவர்க்ளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக இது தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று, உயர் கல்வியில் நீட் மதிப்பெண் விகிதம் பூஜ்ஜியம் சதவீதமாக இருந்தாலும் அவர்களையும் அனுமதிக்கலாம் என்கிற செய்தியை அரசு அறிவித்திருந்த நிலையில், பலர் அதற்கு விமர்சனம் சொல்லி இருந்தார்கள். பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கினாலே அவர்கள் மருத்துவ சேர்க்கையில் அனுமதிக்கப்படுவார்கள் என்கிற தவறான பிம்பம் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

ஜீரோ ‘பர்சன்டைல்’ என்றால் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர்கள் அந்த சீட்டை எடுக்காமல் இருந்தால், இடங்கள் காலியாக இருக்கும் பட்சத்தில் அந்த வரிசையில் கடைசியில் இருந்தால் கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். எனவே, நீட் எழுதுவதிலும் தரவரிசை வருவதிலும் மதிப்பெண் பெறுவதிலும் பிரச்சனை இல்லை. மருத்துவத்தில் குறிப்பாக சில மருத்துவம் சாராத துறைகளில் இடங்கள் காலியாக இருப்பதினால் இத்தகைய அறிவிப்பு அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. எதுவும் வீணாகாமல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதையே பாரதப் பிரதமர் நோக்கமாகக் கொண்டு இதனை அறிவித்திருக்கிறார்.

பள்ளி மாணவர்களுக்கு சுகாதார நடவடிக்கைகளை சொல்லித்தருவதன் மூலம் 90 % நோய்களைத் தடுக்க முடியும் என்று மருத்துவ ஆய்வு சொல்கிறது. குழந்தைகளுக்கு கை கழுவுவதை சொல்லிக் கொடுக்க வேண்டும். கைகளை சுத்தமாக ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டால், அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற முடியும். புதுச்சேரியில் எல்லா வகையிலும் மாணவர்களுக்கு நல்லது செய்யப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

அரசு அதிகாரிகள் பெரிய நிகழ்ச்சிகளுக்காக மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். எவ்வளவு கல்வி கற்ற முன்னேறி இருந்தாலும் அடிப்படையான சுகாதாரம் இல்லை என்றால் நம்மால் முன்னேற முடியாது. எனவே குழந்தைகளை அழைத்து கை கழுவும் பழக்கத்தைச் எடுத்துச் சொல்லி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

புதுச்சேரி மாநிலம் பொதுவெளியில் மலம் கழிக்காத (Open Dedication free) மாநிலங்களில் முன்னிலையில் இருக்கிறது. புதுச்சேரி மத்திய அரசால் சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. புதுச்சேரி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்காக முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல முன்னேற்றங்களை அடைவதற்காக முயற்சி செய்யும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Neet Dr Tamilisai Sounderrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment