புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தக பை இல்லாத தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.
அன்றைய தினம் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வர வேண்டாம். இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி பள்ளிகளுக்கு சென்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி குருசுகுப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது மாணவிகள் பள்ளியில் கோலங்கள் மூலம் புத்தகப் பை இல்லாத தினத்தில் கொண்டாடினர். அதை போல் ஓவியம் மற்றும் கைவினைப் பொருள்களை செய்தனர்.
இதில் சிறப்பாக போடப்பட்டுள்ள கோலங்கள் ஓவியம் மற்றும் கைவினைப் பொருள்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவிகளுடன் சேர்ந்து துணை நிலை ஆளுநர் விளையாடி மகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புத்தகப் பையில்லா தினம் திட்டம் புதுச்சேரியில் புதுமை. எப்போதும் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் வேலை நீ செய்யும் பொழுது இன்னும் சிறப்பாக செய்து முடிக்க இயலும்” என்றார்.
தொடர்ந்து பெரிய மார்க்கெட் விவகாரம் குறித்து பேசுகையில், “வியாபாரிக்கு ஏற்ப 8 மாதத்தில் முறையாக பெரிய மார்க்கெட் கட்டித் தரப்படும். மார்க்கெட் வியாபாரிகளுக்காக புதுச்சேரி அரசு வரும்காலத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. போராட்டத்தில் வைத்த கோரிக்கைகளை பரிசீலிக்கப்பட்டு தலைமை செயலரிடம் ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“