புதுச்சேரி சுகாதாரத்துறை, அப்பல்லோ புரோட்டான் கேர் சார்பில் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் கண்டறிவதற்கான சிறப்பு முகாமின் தொடக்க விழா முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்நு கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். மேலும், மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்வதற்காக நடமாடும் மருத்துவ வாகன சேவையை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “டெங்கு ஒழிப்புக்கு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
புதுச்சேரி அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையிலும், தனியாகவும் சிகிச்சை அளிக்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு அவர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும்.
மக்களுக்கு பாதிப்பு என்றால், அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையிலோ, தனியாகவோ சிகிச்சை செய்வதை தடை செய்ய தயங்க மாட்டோம்” என்றார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
தொடர்ந்து, “புதுச்சேரி பிராந்தியத்தில் டெங்கு,நிபா தொற்று பரவி வரும் நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் ராஜு வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர்,சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா, சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை, “டெங்கு பரவலை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிபா தொற்று பரவி வரும் சூழலில் நோய் தொற்று உள்ள பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.
மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவான சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் வருகை பதிவை கண்காணிக்கும் விதமாக பயோமெட்ரிக் வருகை பதிவை நிறுவ வேண்டும் என அதிகாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.
44 பேர் பாதிப்பு டெங்கு
புதுச்சேரியில் டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஒரே நாளில் மேலும் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று சிக்கன் குனியாவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,மேலும் 3 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் மட்டும் 1195 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“