ஆரோவில் வளர்ச்சி குழு கூட்டம், ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் காணும் பொங்கல் விழா ஆகியவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடந்தது துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதற்கு தலைமை தாங்கினார். இதில் ஆரோவில் அமைப்பின் செயலாளர் ஜெயந்தி ரவி, பிரதீப் பிரேம், தஜெயா உள்ளிட்ட ஆரோவில், அரவிந்தர் சொசைட்டி மற்றும் அரவிந்தர் ஆசிரம அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
Advertisment
நிகழ்ச்சியில் ஆரோவில் வளர்ச்சித் திட்டம் தொடர்பான காணொளி காட்சிப்படங்கள் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில்,
அனைவருக்கும் காணும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீ அரவிந்தரின், அன்னையின் கனவுகளை நிறைவேற்ற நாம் செய்கின்ற முயற்சிகளில் ஒரு முன்னேற்றத்தை இந்த கூட்டம் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.
Advertisment
Advertisements
நாட்டின் 75 ஆவது சுதந்திர ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஜி 20 மாநாட்டை தலைமையேற்று இந்தியா நடத்துகிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் ஸ்ரீ அரவிந்தர், பாரதியார் போன்றோரல் சுதந்திரத்திற்காக போராடினார்கள். அவர்களுடைய கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டிய அவசியம். அப்போதுதான் இந்தியா முன்னேறும்.
ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதி ஜனவரி 31 தேதி புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட இருக்கிறது. விடுதலை போராட்ட காலத்திலும் புதுச்சேரி ஒரு தாயின் மடியை போல பலரை அரவணைத்தது. அரவிந்தர் பாரதியார் வாஞ்சிநாதன் போன்றோருக்கு புதுச்சேரி புகலிடமாக இருந்தது.
அரோவில் நகரத்தில் 5,000 குடும்பங்கள் இருக்க வேண்டும் என்று அன்னை கனவு கண்டார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் 3000 குடும்பங்கள் மட்டுமே அங்கே இருக்கிறார்கள். இதையெல்லாம் சரி செய்வதற்கு தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார் அதன் பின்பு கவர்னர் மாளிகையில் உயர்மட்ட குழு மற்றும் இதர குழுக்களின் கூட்டம் நடைபெற்றது.
பின்பு செய்தியாளரிடம் பேசிய துணைநிலை ஆளுநர்
முதலமைச்சர்கள் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் துணைநிலை ஆளுநர்களின் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு முதலமைச்சர்கள் செயல்பட வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம். தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ்நாடு என்ற பெயருக்கு மிகப் பெரிய சரித்திரம் இருக்கிறது.
மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த பெயர் கிடைத்தது. அவ்வளவு இலகுவாக அந்த பெயரை புறம் தள்ளிவிட முடியாது. என்னைப் பொறுத்தமட்டில் நான் மக்களுக்காகத்தான் செயல்படுகிறேன். கோப்புகளை கோப்புகளாக பார்க்காமல் மக்கள் முகங்களாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் அதை முதலமைச்சரோடு சேர்ந்து வழங்க இருக்கிறோம்.
மக்களுக்காக செய்வதில் எந்த பாரபட்சமும் புதுச்சேரியில் இல்லை. மக்களுக்கு எது நல்லதோ அதை செய்து கொண்டிருக்கிறோம். ஜி 20 மாநாட்டிற்கு வருபவர்களுக்கு நமது கலாச்சாரத்தை பற்றியும் தொன்மையைப் பற்றியும் உணவு முறையை பற்றியும் தெரிவிப்பது மட்டுமல்லாமல் நமது நாட்டின் தொழில் வளர்ச்சி, பருவ நிலையில் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் பங்களிப்பு, ஸ்டார்ட் அப் போன்றவற்றில் இளைஞர்கள் எப்படி தொழில் தொடங்கி இருக்கிறார்கள் இதுபோன்ற நல்லவற்றை வருபவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்ற கணிப்போடு இந்த மாநாடு நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு வருபவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள பிரம்மாண்ட இடங்களை சுற்றிக் காண்பிக்கிறோம். புதுச்சேரிக்கு வருபவர்களை ஆரோவில்லின் சிறப்பு கருதி, அது முக்கியமாக இடமாக இருப்பதால் அதைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“