தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் என்ற பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குளிா் காலங்களில் இந்நோய் அதிகம் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. ஸ்க்ரப் டைபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணி கடியால் ஏற்படுகின்ற காய்ச்சலாகும்.
வீட்டில் வளா்க்கும் செல்லப் பிராணிகளுக்கு இந்த தொற்று ஏற்பட்டாலும் கூட, அது மனிதா்களுக்கு பரவ வாய்ப்புள்ளது. இந்த உண்ணிகள் கடித்த 14 நாள்களில் காய்ச்சல், குளிா் நடுக்கம், உடல் சோா்வு, உடலில் வலி, இருமல், உடல் முழுவதும் நெறிக்கட்டிக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதனை நாம் கவனிக்காமல் விட்டால் நுரையீரல் தொற்று, நிமோனியா, மூளைக்கு தொற்று பரவி கோமா, பதற்றநிலை, திடீா் சுவாச செயலிழப்பு, கல்லீரலில் பாதிப்பு ஏற்படுத்தி மஞ்சள் காமாலை, மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும்.கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழக்கும். எனவே, காய்ச்சலோடு சோ்த்து உண்ணி கடித்ததற்கான புண் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.