தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு உச்சநீன்றம் தீர்ப்பளித்தது. கடந்த மார்ச் 16ம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
கடந்த மாதம் 29ம் தேதியுடன் இந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பவில்லை. இதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. தமிழகம் முழுவதுமே போராட்டக் களமாக மாறியிருக்கிறது. திமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தமிழக அரசு தாக்கல் செய்த அந்த மனுவில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வதால் காவிரி டெல்டா பாசன பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்புக்குரியது என்றும் குறிப்பிட்டு இருந்தது.
இதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏப்ரல் 9-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில அரசு கொறடா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மீது கடந்த செவ்வாய் கிழமை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் இந்த வழக்கை தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. தமிழக அரசின் மனுவுடன் புதுச்சேரி அரசின் மனுவும் சேர்த்து வரும் 9ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.