/indian-express-tamil/media/media_files/2025/09/28/pudhuchery-2025-09-28-10-57-52.jpg)
நலிவடைந்த ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ. 1000 போனஸ்: புதுச்சேரி அரசு அறிவிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தலா ரூ.1,000 நிதியுதவியை புதுச்சேரி அரசு வழங்குகிறது. இதற்காக அரசுக்கு மொத்தம் ரூ.13.16 கோடி செலவாகிறது. இதுகுறித்து புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் இராமகிருஷ்ணன் இன்று (அக். 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:
"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள நலிவடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்களில் ஒன்றான, 'தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக நிதி உதவி வழங்கும் திட்டம்' இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தி அடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா ரூ.1,000/- வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. புதுச்சேரி பிராந்தியத்தைச் சேர்ந்த 1,01,685 பயனாளிகளும், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த 24,778 பயனாளிகளும், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த 5,144 பயனாளிகளும் இந்த நிதி உதவியைப் பெறுகின்றனர்.
ஒட்டுமொத்தமாகப் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக ஒரு லட்சத்துக்கு 31 ஆயிரத்து 607 பயனாளிகளுக்கு ரூ.13,16,07,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி இன்று (அக். 18) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us