புதுச்சேரியில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் ஏழு லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது, இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு இன்று தெரிவித்தார்
உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4), உலக மகளிர் தினம் (மார்ச் 8) உலக சிறுநீரக தினம் (மார்ச் 9) ஆகிய தினங்களை முன்னிட்டு அனைத்து இல்லங்களுக்கும் தொற்றா நோயின் ஆரம்ப பரிசோதனை மற்றும் புற்றுநோயின் அறிகுறி மற்றும் ஆரம்பத்தில் கண்டறியும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாபெரும் தொற்றா நோய் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் மார்ச் 27ம் தேதி இன்று நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் தேசிய பாதுகாப்பு பல்கலை.; ஒப்பந்தம் கையெழுத்து
இந்த முகாமில் நீரிழிவு நோய் மூலம் ஏற்படும் விளைவுகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்படும் விளைவுகள் பற்றிய கண்காட்சி இடம்பெற்றது. மேலும் சித்தா மற்றும் ஹோமியோபதி சார்பாக உணவு கண்காட்சியும் இடம்பெற்று இருந்தது. தொற்றா நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவுகள், அதன் முக்கிய அம்சங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது.
முகாமிற்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் சிறுநீரக, இதய, விழி, வாய், காது, மூக்கு, தொண்டை பரிசோதனை போன்றவை இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து வந்த வல்லுநர்கள் மூலம் பரிசோதனை மற்றும் ஆலோசனை/ மருத்துவம் வழங்கப்பட்டன.
மேலும் மகளிருக்கு என்று கர்ப்பவாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயை கண்டறிய ராஜீவ் காந்தி மகளிர் மருத்துவமனையில் இருந்து வல்லுநர்கள் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர். இந்த முகாமில் தொற்றா நோய் இருக்கும் மக்களுக்கு பார்வை குறைபாடு இருந்தால் அவர்களுக்கு தேவையான கண்ணாடிகள் கொடுக்கப்பட்டன.
மேலும் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு செவி கோளாறுகள் அதிகம் உள்ளதால் அவர்களுக்கு என்று சிறப்பு கருவிகள் மூலம் திரையிடல் செய்து குறைபாடுகள் கண்டறியப்பட்டது. மேலும் இந்த விழாவில் புற்றுநோய் பற்றிய முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட கையேட்டை சுகாதாரத் துறை சார்பாக அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
இவ்விழாவினை முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு பேசுகையில், 30 வயதிற்கு மேற்பட்டோர் இரு பாலினரும் புற்றுநோய்க்கான பரிசோதனைகளுக்கு தானாகவே முன் வர வேண்டும். வாயில் ஏற்படும் புற்றுநோய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்ப வாய் புற்றுநோய் போன்றவை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். புதுவை சார்ந்த 30 வயதிற்கு மேற்பட்டோர் சராசரியாக 7 லட்சம் மக்கள் தொகையினருக்கு இந்த வகையில் தொற்றா நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. புதுச்சேரி 30 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவரும் இப்பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு புதுவை மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் துணை இயக்குனர் (பொது சுகாதாரம்) டாக்டர் முரளி, துணை இயக்குனர் (தடுப்பூசி பிரிவு) டாக்டர். ராஜம்பாள், துணை இயக்குனர் (செய்தி விளம்பரம் மற்றும் கல்வி துறை) டாக்டர். ரகுநாதன், மாநில நோடல் அதிகாரி/ NPCDCS முதன்மை அதிகாரி (அரசு மருந்தகம்) டாக்டர் ரமேஷ், தொற்றா நோய் திட்ட அதிகாரி டாக்டர். துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இச்சிறப்பு தொற்றா நோய் முகாமினை முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வினி மற்றும் சுகாதார ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.