/indian-express-tamil/media/media_files/2025/08/06/puducherry-impersonation-scam-case-book-3-including-bank-manager-tamil-news-2025-08-06-16-20-59.jpg)
புதுச்சேரியில் இறந்த போனவர் 'டெபாசிட்' செய்திருந்த ரூ.67 லட்சத்தை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக வங்கி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள காரைக்கால் கோட்டுச்சேரி பூக்கார தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது முதல் மனைவி சுசிலாதேவி. இவர் சென்னை ஐகோர்ட் மூலம் உத்தரவு பெற்று, காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், "எங்களுக்கு லட்சுமி, பார்வதி ஆகிய 2 மகள்கள் மற்றும் விநாயகமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். லட்சுமி சிறுவயதிலேயே இறந்து விட்டார். என் கணவர் நான் உயிருடன் இருக்கும்போதே சுசிலா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பினால், அவருடன் குடும்பம் நடத்தி லட்சுமி பிரியா, வெற்றிவேல் ஆகிய 2 குழந்தைகள் உண்டு.
என் கணவர் உயிருடன் இருக்கும்போது, காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம் டெபாசிட் செய்திருந்தார். என் கணவரின் இறப்புக்குப் பின்பு அந்தத் தொகையானது, கோவிந்தராஜின் சட்டபூர்வமான வாரிசுகளை மட்டுமே சென்றடைய வேண்டும். 5 சரிசம பங்கு வாரிசு உரிமை சட்டப்படி, 2-வது மனைவி என்ற அந்தஸ்து முதல் மனைவி இருக்கும்போது கிடையாது.
எனவே, டெபாசிட் தொகையானது சுசிலாதேவியாகிய எனக்கும், எனது குழந்தைகளான பார்வதி, விநாயக மூர்த்தி மற்றும் சுசிலாவின் குழந்தைகளான பிரியா, லட்சமி ஆகியோருக்கு 5 சரிசம பாகங்களாக வந்து சேர வேண்டும். இந்நிலையில், 2-வது மனைவி சுசிலாவின் மகன் வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி சங்கரி என்ற சாரதாம்பாள் ஆகியோர் என்னை ஏமாற்றும்பொருட்டு, டெபாசிட் தொகையை வங்கிமேலாளர் அந்தோணி ரூபனுடன் இணைந்து ஆள்மாறாட்டம் செய்து ரூ. லட்சத்து 50 ஆயிரத்தை மோசடி செய்து எடுத்து கொண்டனர்.
இதையறிந்து நான், வங்கி மேலாளர் அந்தோணி ரூபனை சந்தித்து கேட்ட போது, 'கோவிந்தராஜின் வாரிசுகள் ஆகிய உங்கள் 5 பேருக்கும் பணம் செட்டில் ஆகிவிட்டது. நீங்கள் அனைவரும் வங்கிக்கு வந்து பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து போட்டு உள்ளீர்கள். மீண்டும் பணம் கேட்டால் உங்கள் அனைவர் மீதும் புகார் தந்து சிறைக்கு அனுப்பி விடுவேன்' என கூறி மிரட்டினார்.
இறந்த எனது கணவர் எனக்கும், வாரிசுகளான எனது மகள் பார்வதி, மகன் விநாயகமூர்த்திக்கு பணத்தை வழங்காமல், எங்களுக்கு பதிலாக வேறு ஆட்களை முன்வைத்து கையெழுத்து போட்டு, ஆள் மாறாட்டம் செய்து மூவரும் பணத்தை கையாடல்செய்துவிட்டனர்.எனவே, அவர்கள் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் விசாரணை நடத்தி பணம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் அந்தோணி ரூபன், வெற்றிவேல், சங்கரி என்ற சாரதாம்பாள் ஆகிய 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.