புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் நியமன விவகாரத்தில், கவர்னர் கைலாஷ்நாதன் - முதல்வர் ரங்கசாமி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 'அதிகாரம் இல்லாத பதவி தேவையில்லை எனவும், ராஜினாமா செய்வதாகவும் முதல்வர் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், கவர்னர் - முதல்வர் மோதலால் புதுச்சேரி மக்களின் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு, சட்டசபை கட்டட படிக்கட்டில் அமர்ந்து, நேற்று புதன்கிழமை காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்திற்கு பல்வேறு பொதுநல அமைப்புகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றன. இதனிடையே, முதல்வரின் ராஜினாமா எண்ணம் தொடர்பாக, ஹோட்டல் அண்ணாமலையில் ஆலோசனை கூட்டம் நடத்திய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், மதியம் 2:00 மணியளவில் சபாநாயகரை சந்திக்க சட்டசபைக்கு வந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/af7989e1-1bf.jpg)
அப்போது சட்டசபை வளாகத்தில், தர்ணா போராட்டம் நடத்திய நேரு எம்.எல்.ஏ-வை, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர். அவர் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகர் ராஜவேலுவிடம் வழங்கினார். மாநில அந்தஸ்திற்காக தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, கடிதத்தை முதல்வரிடம் வழங்கும்படி கூறிவிட்டு, தர்ணா போராட்டத்தை மாலை 6:00 மணியளவில் விலக்கி கொண்டார். இதேபோல் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை, ராஜினாமா செய்துவிட்டு, மாநில அந்தஸ்திற்காக களம் இறங்க வேண்டும் என, நேரு எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார்.
இது குறித்து அவர் கூறும் போது, "நேற்று முதல் சட்டமன்றம் முடக்கப்பட்டதாக தெரிகிறது. மூன்று நியமன எம்.எல்.ஏ கூட மத்தியில் ஆளும் கட்சியினருக்கு கொடுக்கிறார்கள். ஆதி திராவிட அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்தனர். அதிகாரம் இல்லை என்றால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு முன்பாக எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன், மற்றவர்களும் ராஜினாமா செய்து தேர்தலை புறக்கணிக்க வேண்டும். தனி மாநில அந்துஸ்து கிடைக்கும் வரை அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்" என்றும் நேரு எம்.எல்.ஏ வலியுறுத்தினார்.
செய்தி: பாபு ராஜந்திரன் - புதுச்சேரி.