நிரந்தர கட்டிடம் வேண்டும், மின் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திரா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வந்தது. போதிய இட வசதி மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்றதால் தற்காலிகமாக கோரிமேட்டில் உள்ள இந்திரா காந்தி அரசு உயர்நிலை பள்ளி கட்டிடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தற்காலிக கல்லூரி கட்டிடத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இப்போதைய பேராசிரியர்கள் இல்லாததால் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நிரந்தர கட்டிடம் கோரியும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வித்துறை அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் விரைவில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தது தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.மாணவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.