/indian-express-tamil/media/media_files/2025/10/23/pondicherry-2025-10-23-20-06-32.jpg)
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சுமார் 712 செவிலியர்களை எந்தவித நுழைவுத் தேர்வும் இல்லாமல், 12-ஆம் வகுப்பு மற்றும் நர்சிங் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நாராயணசாமி குற்றம் சாட்டினார். இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, "இந்த முறை தில்லுமுல்லுக்கும், தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே நுழைப்பதற்கான முதற்கட்ட வேலை. இதில் மிகப்பெரிய ஊழலுக்கு இடம் கொடுக்கும். தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்காது. நர்சிங் பதவிக்கு ரூ. 20 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது என்று தகவல் வருகிறது. முதலமைச்சர் தலைமையில் தான் இந்த தேர்வு முறை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என நாராயணசாமி தெரிவித்தார்.
ஊழலற்ற ஆட்சி நடத்துவதாக கூறி வரும் முதலமைச்சர் தலைமையின் கீழ் "ஊழல் மட்டுமே நடைபெறுகிறது" என்றும் அவர் சாடினார். உடனடியாக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தேர்வு முறையை மாற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். மத்திய அரசு நடத்த உள்ள அகில இந்திய செவிலியர் தேர்வு குறித்தும் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/23/narayanasamy-2025-10-23-20-06-56.jpg)
இந்தத் தேர்வுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தேர்வு மையமாக இல்லை என்றும், மாறாக வட மாநிலங்கள், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை அமைப்பது, "பழைய இந்தியர்களை" (வட இந்தியர்களைக் குறிப்பிடுகிறார்) பணியில் அமர்த்தவே என்று குற்றம் சாட்டினார். "மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பிலும் மக்களை துன்புறுத்தும், பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டார். மோடி அரசு செவிலியர் தேர்வில் செவிலியர் பட்டம் பெற்றவர்களை புறக்கணிக்கிறது எனவும், புதுச்சேரி மாநில அரசும் அதையே கடைபிடிக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
மதுபான விற்பனை உரிமக் கட்டண உயர்வுகளிலும் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் நடைபெறுவதாக நாராயணசாமி குற்றம் சாட்டினார். Fl1-க்கு வருடத்திற்கு 21 லட்சமாக புதுப்பிக்கும் கட்டணமாக இருந்தது தற்போது அது 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
அதேபோன்று Fl2 சில்லரை விற்பனை அனுமதி்உரிமத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியுள்ளனர். ஆனால், ரெஸ்டோபாருக்கு மட்டும் கட்டணம் ரூ. 6 லட்சத்திலிருந்து ஒரு லட்சம் மட்டும் உயர்த்தி ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
"ரெஸ்டோ பார் வைத்துள்ளவர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு வேண்டியவர்கள்" என்றும், "முதலமைச்சரிடம் 6 புரோக்கர்கள் உள்ளனர்" என்றும் நாராயணசாமி பகிரங்கமாகத் தெரிவித்தார். மேலும், "மதுபான விற்பனை உரிமத்தின் கட்டணத்தை உயர்த்துவது, பின்னர் பேரம் பேசி அதை குறைப்பது" என்ற வேலையைத் தான் முதலமைச்சர் ரங்கசாமி செய்து வருவதாகவும், இந்த ஆட்சி "100-க்கு 100% ஊழலில் திளைத்த ஆட்சி" என்றும் அவர் ஆவேசப்பட்டார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/10/23/narayanasamy-2025-10-23-20-07-18.jpg)
ஜாஸ் சார்லஸ் மார்ட்டின் என்ற அமைப்பு, தங்களை ஒரு தன்னார்வ நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டு உலா வருவதாக அவர் குறிப்பிட்டார். "மக்களுக்காக உதவி செய்ய வந்துள்ளதாக" கூறி செயல்படும் இந்த அமைப்பு, சமீபத்தில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பிரிட்ஜ் கொடுத்ததாக கேள்விப்பட்டதாகவும், பல கட்சி நிர்வாகிகளிடம் சென்று "எங்களது பெயரில் தேர்தலில் நில்லுங்கள்" எனப் பேசி வருவதாகவும் நாராயணசாமி கூறினார்.
"ஜாஸ் சார்லஸ் மார்ட்டின் ஒரு பாஜகவின் பி டீம். பாஜகவின் நிழலாக செயல்பட்டு வருகிறது. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஜாஸ் சார்லஸ் மார்ட்டினுடன் இணைந்து செயல்படுகின்றனர். இதற்கு இவையெல்லாம் ஆதாரம் எங்களிடம் உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், ஜாஸ் சார்லசுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய நாராயணசாமி, "ராமலிங்கம் வீட்டில் ஜாஸ் சார்லஸ் கொடுத்த பிரிட்ஜ் உள்ளது" என்று விமர்சித்தார். மேலும், ஜான்குமார் மற்றும் கல்யாணசுந்தரம் போன்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
"ஜாஸ் சார்லஸ் பேட்டி கொடுக்கும் போது ஆளும் பாஜக, என்.ஆர்.காங்கிரஸை குறை கூறி வருகிறார். ஆனால் அவருடன் பாஜக கைகோர்த்து உள்ளது. காசு கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என ஜாஸ் சார்லஸ் நினைக்கிறார். ஆனால் அது நடக்காது" என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார். பாஜக தொகுதிகளில் செய்யாமல், என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் தோல்வியுற்ற தொகுதிகளில் ஜாஸ் சார்லஸ் அன்னதானம் செய்வது, உதவி செய்வது போன்றவற்றைச் செய்து வருவதாகவும், "பாஜகவின் பி டீம் ஜாஸ் சார்லஸ் மார்ட்டின் அமைப்பு உள்ளது எனத் தெளிவாகத் தெரிகிறது" என்றும் அவர் கூறினார்.
"மல்லாடி கிருஷ்ணராவ் ஒவ்வொரு முறையும் ஒரு கட்சியில் நிற்பார். அவர் ஒரு பச்சோந்தி. அவர் நிறத்திற்கு ஏற்ப மாறுபவர். நேரத்திற்கு நேரம், காலத்திற்கு ஏற்ப மாறுபவர் மல்லாடி. எனவே அவரைப் பற்றிப் பேசி பிரயோஜனம் இல்லை" என்று மல்லாடி கிருஷ்ணராவ் மீதான தனது விமர்சனத்தையும் நாராயணசாமி முன்வைத்தார்."இந்த ஊழல் ஆட்சியைப் பார்த்து மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர்" என்றும், பிஜேபி - என் ஆர் ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளதாகவும் நாராயணசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us