புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் "அமுதம் தாய்ப்பால் வங்கி" கடந்த 9 ஆண்டுகளாகப் பச்சிளம் குழந்தைகளுக்கு, குறிப்பாக குறைமாதக் குழந்தைகளுக்கு, தாய்ப்பாலை இலவசமாக வழங்கி வருகிறது.
ஜிப்மர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் துறை பேராசிரியர் டாக்டர் ஆதிசிவம் இன்று வெளியிட்ட தகவல்படி, ஜிப்மர் மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மில்லி வரை தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் 20 குழந்தைகள், குறிப்பாக குறைமாதக் குழந்தைகள், இந்த தாய்ப்பால் வங்கியிலிருந்து எந்தக் கட்டணமும் இல்லாமல் பயனடைந்து வருகின்றனர்.
9 ஆண்டுகால மகத்தான சேவை
ஜிப்மர் மருத்துவமனையின் "அமுதம் தாய்ப்பால் மையம்" (தாய்ப்பால் வங்கி) 2016 ஜூலை 13 முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்தத் தாய்ப்பால் வங்கி மூலம் எண்ணற்ற பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளன. இந்த அரிய சேவை, ஜிப்மர் மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் முதல் தளத்தில், பச்சிளம் குழந்தைகள் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு அருகிலேயே செயல்பட்டு வருகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/12/whatsapp-image-2025-2025-07-12-17-03-33.jpeg)
அதிக பிரசவங்கள் நடைபெறும் மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கியின் சேவை அளப்பரியது. சில காரணங்களால் தாய்மார்களால் தங்கள் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முடியாதபோது, தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பால் இந்த குழந்தைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும்கூட, தாய்ப்பால் வங்கி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதை டாக்டர் ஆதிசிவம் எடுத்துரைத்தார். தாய்ப்பால் வங்கி ஆரம்பிக்கப்பட்டபோது, ஒரு நாளைக்கு நானூறு மில்லி தாய்ப்பால் மட்டுமே சேகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் மில்லி வரை சேகரிக்கப்படுகிறது என்பது இதன் வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/12/whatsapp-image-2025-2025-07-12-17-03-52.jpeg)
இந்த 9 வருட சிறப்பான சேவைக்கு, தாய்ப்பால் தானம் செய்யும் அன்புள்ளம் கொண்ட தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் முக்கியக் காரணமாகும். அவர்களின் அர்ப்பணிப்பு இச்சேவையின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
தாய்ப்பாலின் அவசியம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள்
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, முதல் ஆறு மாதங்களுக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஏதேனும் ஒரு காரணத்தால், தாய் தன் குழந்தைக்கு நேரடியாகத் தாய்ப்பால் கொடுக்க முடியாதபோது, அந்த அன்னையின் தாய்ப்பாலையே கை அல்லது கருவி கொண்டு பீச்சி எடுத்து குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். இதுவும் முடியாதபோது, தாய்ப்பால் வங்கியிலிருந்து பெறப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்ப்பால் வங்கியில், தாய்ப்பால் தானமாகப் பெறுவதற்கு முன்னர் தாய்மார்கள் நன்கு பரிசோதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, அவர்களுக்கு எச்ஐவி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற கிருமித் தொற்றுகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே தாய்ப்பால் பெறப்படுகிறது. தானமாகப் பெறப்பட்ட தாய்ப்பால் தகுந்த தட்பவெப்ப நிலையில் பதப்படுத்தப்பட்டு, பிறகு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. பின்னர், அதில் கிருமித் தாக்கம் உள்ளதா என மீண்டும் பரிசோதிக்கப்பட்ட பின்னரே தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் தாய்ப்பாலின் தரத்தையும், குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன.
பாபு ராஜேந்திரன் புதுச்சேரி