கொல்கத்தா மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பணி புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பணிபுரியும் பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணியிடம் வேண்டுமென்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“