புதுச்சேரியில் கடல் அரிப்பை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத புதுச்சேரி அரசை கண்டித்து 4 மீனவ கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி - சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கடற் கரையோர மீனவ கிராமங்களான பெரிய காலாப்பட்டு, சின்ன காலப் பட்டு, கனக செட்டிகுளம், பிள்ளைச் சாவடி ஆகியவை உள்ளன. இந்தப் பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தூண்டில் முள் வளைவு அமைப்பதற்கான பூமி பூஜை செய்யப்பட்டது.
இந்த பூஜை செய்யப்பட்டு தற்போது 6 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் தூண்டில் முள் வளைவு அமைப்பதற்கும், கருங்கற்களை கொட்டுவதற்கும் எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஆத்திரமடந்த மீனவ கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆளும் அரசை கண்டித்தும், மீனவர்களை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் புதுச்சேரி - சென்னை இடையேயான சாலையில் கடும் போக்குவரத்து நேரில் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு துணை ஆட்சியர் அர்ஜூன் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தூண்டில் முள் வளைவு அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“