/indian-express-tamil/media/media_files/2025/07/22/puducherry-karaikal-dist-thirunallar-sani-peyarchi-festival-development-worth-rs-25-9-crore-tamil-news-2025-07-22-15-04-23.jpg)
பஞ்சாங்கப்படி வரும் அடுத்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி (6.3.2026) அன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார்.
புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் உள்ள பிரசித்தி பெற்ற பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ளார் சனி பகவான். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். வாக்கியப் பஞ்சாங்கப்படி வரும் அடுத்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி (6.3.2026) அன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார்.
இந்தச் சனி பெயர்ச்சி விழாவுக்கு தமிழகம், புதுவை மட்டுமன்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வருவார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகப் பகுதிகளிலும் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுவை சுற்றுலா மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் நேற்று திங்கள்கிழமை கூறியதாவது:-
திருநள்ளாறு திருக்கோயில் திருப்பணிக்காக ரூ.25.94 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு மத்திய சுற்றுலாத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் காரைக்கால் திருநள்ளாறு முதன்மை பேருந்து நிலையத்தில் இருந்து இக்கோயிலுக்குச் செல்வதற்கான சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு பேட்டரியால் இயங்கும் 10 வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட உள்ளது.
இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பயணம் செய்ய முடியும். இதைத் தவிர திருப்பதியில் உள்ளதைப் போன்று யாத்ரிகர்கள் சுற்றுலா பிளாஸா என்ற திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, இக்கோயிலுக்கு வருவோர் குளியல், புத்துணர்ச்சி பெறும் வசதி, கோயிலின் பின்பக்கத்தில் ஒருங்கிணைந்த கார் நிறுத்தும் வசதியும் செய்யப்படவுள்ளது. சுமார் 400 கார்கள், சுற்றுலாப் பேருந்துகளை நிறுத்த முடியும். இதைத் தவிர கழிப்பறை வசதி, பேட்டரி சார்ஜ் நிலையம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படும்.
இக்கோயிலின் நளன் குளத்தில் குளிக்கும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இந்த ஆடைகளை சேகரித்து தரம்பிரித்து, மறு பயன்பாட்டுக்கு உகந்த ஆடைகளாக இருந்தால் எடுத்துக் கொள்ளப்படும். மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை எரிக்கவும் கோயில் அருகே இயந்திரம் நிறுவப்படும். இதுதவிர காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுத் திட்டமும் ரூ.20.3 கோடி மதிப்பீட்டில் தீட்டப்பட்டுள்ளது.
இதற்கும் மத்திய அரசின் சுற்றுலா துறை அனுமதியளித்துள்ளது. கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலும் இத் திட்டத்துக்குப் பெறப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் காரைக்கால் கடற்கரை பல்வேறு வசதிகள் பெறவுள்ளது. அனைத்துத் திட்டங்களும் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவுக்கு முன்பாகவே செய்து முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.