/indian-express-tamil/media/media_files/2025/09/02/whatsapp-image-202-2025-09-02-23-12-21.jpeg)
Puducherry
புதுச்சேரி, செப்டம்பர் 2, 2025: புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், வில்லியனூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா, ரூபாய் 10 கோடி மதிப்புள்ள 7 ஏக்கர் நிலத்தை ரவுடிகள் மூலம் மிரட்டி போலி பத்திரம் தயார் செய்ததாக நிலத்தின் உரிமையாளர்கள் இன்று துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நில உரிமையாளர் சந்தான லட்சுமி, “வில்லியனூர், ஒதியம்பட்டு பகுதியில் உள்ள எங்கள் 7 ஏக்கர் நிலத்தை ரூபாய் 10 கோடிக்கு மதிப்புள்ள நிலையில், இரா. சிவா குறைந்த விலைக்கு அதாவது ரூபாய் 3 கோடிக்கு கேட்டுள்ளார். நாங்கள் நிலத்தை விற்க மறுத்த நிலையில், எங்களுக்கு தெரியாமலே போலி பத்திரம் மூலம் அந்த நிலத்தை மிரட்டி அபகரிப்பு செய்துவிட்டார். இது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா மறுப்பு: "என் மீது அவதூறு பரப்பப்படுகிறது"
மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிற்பகல் தனது சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தார்.
“திமுக விவசாய அணியைச் சேர்ந்த ஒதியம்பட்டு குலசேகரன், அப்பகுதியில் உள்ள நிலத்தை அவரது உறவினரிடம் இருந்து குத்தகை எடுத்து, 100 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று தலைமுறையாக பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில், காட்டேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.பி.என் காவலர் கார்த்திகேயன் கடந்த ஆகஸ்ட் 16 அன்று, 40 அடியாட்களுடன் குலசேகரன் பயிர் செய்யும் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரவுடித்தனம் செய்துள்ளார். இதுகுறித்து குலசேகரன் என்னிடம் தெரிவித்ததும், உடனடியாக போலீசாரை தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். வில்லியனூர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், டிஐஜி, எஸ்எஸ்பி ஆகியோரிடம் பேசி நடவடிக்கை எடுக்க செய்தேன்” என்று விளக்கமளித்தார்.
மேலும் அவர், “இந்த விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது அவதூறு பரப்பும் நோக்கில், ஆளுநர் மாளிகை முன்பு சிலர் பேட்டி அளித்துள்ளனர். வில்லியனூர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெடக்கூடாது, நிலம் யாருக்கு சொந்தமோ அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்த விவகாரத்தில் நான் எந்தவித தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை” என்று ஆவணங்களை வெளியிட்டு விளக்கமளித்தார்.
பாபு பாபு ராஜேந்திரன்
புதுச்சேரி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.