புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் ரா. சிவா, காவல் துறை தலைவருக்கு மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த மனுவில், “புதுச்சேரி மாநில காவல் துறை தலைவராக தாங்கள் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. தாங்களும் ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று ஆய்வு நடத்தி காவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறீர்கள்.
தங்கள் வருகை மூலம் புதுச்சேரியில் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை அடியோடு தடுப்பீர்கள் என்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அரணாக காவல் துறையை மாற்றுவீர்கள் என்றெல்லாம் நம்பிக்கை வைத்திருந்தோம்.
ஆனால் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உருளையன்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதியில் கடந்த வாரம் அறை எடுத்து தங்கிய சுற்றுலா தம்பதிகள் விடுதி அறையில் ரகசிய கேமரா வைத்து பதிவு செய்ததை கண்டுபிடித்து காவல் துறையிடம் ஆதாரத்துடன் புகார் அளித்து, அந்த வழக்கில் காவல் துறை கடமைக்கு இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள். இவர்கள் புதுச்சேரியில் வேறு எங்காவது விடுதிகள் லீசுக்கு எடுத்து ரகசிய கேமரா வைத்து பதிவு செய்துள்ளனாரா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த விவகாரத்தில் காவல் துறை சமரசம் செய்துகொள்ளக் கூடாது. குற்றப்பின்னணியில் அரசியல் தலையீடு இல்லாமல் காவல் துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். புதுச்சேரியில் உள்ள தனியார் விடுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற செயல்களை செய்வோர் மீது பாரபட்சமின்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதை வஸ்துக்களால் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சுற்றுலாப் பயணிகள் சீரழியக்கூடிய நிலை தொடர்கிறது.
சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற புதுச்சேரி இன்று போதை நகரமாக, பாதுகாற்ற நிலையில் இருக்கிறது. தினந்தோறும் செய்தித்தாள்களை திறந்தால் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள், மருத்துவர்கள் கைது என்றும் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செய்திகளைத்தான் பார்க்க முடிகிறது.
இது புதுச்சேரி காவல் துறைக்கு அவப்பெயரை, கலங்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். இதேநிலை தொடர்ந்தால் புதுச்சேரியில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்து, பொதுமக்கள் அச்சத்தோடு வாழக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.
ஆகவே, புதுச்சேரி மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளம் பெண்களை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை காவல் துறை ஏற்படுத்த வேண்டும் என்பதை புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“