புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமிக்கும் - துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜான் குமார் இன்று ராஜினாமா செய்தார். இதனால், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் அதனால் காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
இதனிடையே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த 10ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என புகார் மனு அளித்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண்பேடியை நீக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"