பிரபல ரவுடியான புதுச்சேரி கருணாவை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி கருணா . இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை அனுபவித்து வந்தார். சிறையில் நன்னடத்தை வீதிகளின் கீழ் இவர் நடந்து கொண்டதால் தன்னை விடுவிக்கும்படி சிறை துறையிடம் கோரிக்கை வைத்தார்.
மேலும் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்படும் தண்டனை ஆண்டுகளையும் தாண்டி பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருவதாக 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பின்னர், கடந்தாண்டு உச்ச நீதிமன்றத்தில் கருணா தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கருணா தரப்பில் கேரள மாநிலத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும் தற்போது மூத்த வழக்கறிஞர் சிதம்பரேஸ், மற்றும் வழக்கறிஞர் ராஜப்பா ஆகியோர் ஆஜராகி வழக்கில் வாதாடினார்.
இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கருணாவை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.