சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தை கைவிட வேண்டும்; புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

புதுச்சேரியில் மறு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவிப்பு செய்து அட்டவணை வெளியிட்டுள்ளதை பார்க்கும்போது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதை புதுச்சேரி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது – எதிர்கட்சி தலைவர் இரா. சிவா

புதுச்சேரியில் மறு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவிப்பு செய்து அட்டவணை வெளியிட்டுள்ளதை பார்க்கும்போது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதை புதுச்சேரி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது – எதிர்கட்சி தலைவர் இரா. சிவா

author-image
WebDesk
New Update
puducherry siva

மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கைவிட வேண்டும் என புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;

அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் மூலம் கல்வி பயிலும் 9–ஆம் வகுப்பு மற்றும் 11–ஆம் வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையான மாணவர்கள் இவ்வாண்டு தேர்வில் தோல்வி அடைந்த நிலையில் அவர்களின் இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டு, வரும் 10–ஆம் தேதி முதல் மறு தேர்வு நடத்த கல்வித்துறை அறிவிப்பு செய்து அட்டவணை வெளியிட்டுள்ளதை பார்க்கும்போது சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதை புதுச்சேரி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது மூன்றாம் வகுப்பு முதல் 12–ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வை நடத்தி அவைகளில் தோல்வி காணும் மாணவர்களை படிப்படியாக கல்வியிலிருந்து வெளியேற்றும் வேலையை தான் செய்யும். அதன் மூலம் சமூகத்தில் பின்தங்கி உள்ளவர்களும், ஏழைகளும் கல்வியிலிருந்து வெளியேறி உடல் உழைப்பிற்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, கல்வியில் முன்னேறிய உயர் வகுப்பு மற்றும் பணக்காரர் வீட்டு பிள்ளைகளுக்கு வேலையாட்களாக தயாராக வேண்டும் என்ற மிக மோசமான பிற்போக்கு சித்தாந்தத்தை கொண்டதாகும். அதனால் தான் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் இந்த புதிய கல்வித் திட்டத்தை எதிர்த்து வருவதுடன், அத்திட்டம் வேண்டாம் என்று போராடி வருகிறோம்.

Advertisment
Advertisements

எங்கள் நிலைப்பாடு உண்மை என்பது புதுச்சேரி அரசின் அரசு பள்ளி மாணவர்களின் 9–ஆம் வகுப்பு மற்றும் 11–ஆம் வகுப்பு தேர்வு தோல்விகள் உணர்த்துகின்றன. இந்த இடைநிற்றலை ஊக்குவிப்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கமாகும். ஆனால் மக்கள் அரசை கேள்வி கேட்பார்கள் என்ற பயத்தினால் தான் புதுச்சேரி அரசு மறுதேர்வு என்று இந்த முடிவை எடுத்துள்ளது. இல்லையேல் வருகின்ற 10 மற்றும் 12–ஆம் வகுப்புகளுக்கு தேவையான மாணவர்கள் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலை உருவாகும் என்று தான் கடந்த நான்கு ஆண்டுகளாகவே சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வந்தது முதல் அதற்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும் ஆசிரியர்களுக்கு சரியான தொடர் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்ததுடன், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரினோம். இவைகளில் எதையும் செய்யாத இந்த அரசு நடந்தேறிய தேர்வு தோல்வியை மறைப்பதற்கு மறுதேர்வு என்று நாடகம் ஆடுகிறது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி பாதிக்கு மேற்பட்ட மாணவர்கள் 9 மற்றும் 11–ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை என்று அறிகிறோம். ஆகவே, கல்வித்துறை தேர்வில் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கையை முதலில் வெளியிட வேண்டும். தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்து, இதனைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மறுத்தேர்வு நடத்துவதற்கான கால அவகாசம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து அவசரகதியில் தேர்வை நடத்தி நீங்களே மதிப்பெண்களை வாரி வழங்கி கணக்கு காட்டினால் எதிர்வரும் ஆண்டில் 10 மற்றும் 12–ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன். 

ஆகவே, இதில் வெளிப்படைத்தன்மையுடன் அரசு முழுமையான உண்மையை வெளியிட வேண்டும். அத்துடன் அவசரகதியில் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்வித் திட்டத்தை நுழைத்து மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

Puducherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: