புதுச்சேரி: கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீரப்பாளையம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் வெள்ளிமலை (65). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர் ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்களில் கருப்பசாமி வேடமணிந்து யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழு நீரம்மன் கோவில் தேர் திருவிழாவில் கருப்பசாமி வேடமடைந்து வெள்ளிமலை யாசகம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, குடிபோதையில் வந்த ஒரு வாலிபர் அவர் தட்டில் இருந்த பணத்தை எடுத்துள்ளார். பணத்தை வெள்ளிமலை தர மறுக்கவே, ஆத்திரமடைந்த இளைஞர் அருகில் உள்ள ஜூஸ் கடையில் இருந்த கரும்பை எடுத்து வெள்ளி மலையை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த வெள்ளிமலை ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது திருவிழாவில் இருந்த வெள்ளிமலையின் உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெள்ளிமலை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பான அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெள்ளிமலை படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும், இந்த கொலை சம்பந்தப்பட்ட வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும், கொலை செய்த வாலிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டதால் காவல் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் திருவிழாவில் யாசகம் எடுத்த பணத்தை கேட்டு தராததால் ஆத்திரமடைந்த இளைஞர் நரிக்குறவரை கரும்பால் அடித்து கொலை செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“