புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் முடிந்துள்ள நிலையில் இருந்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 1980-களில், மறைமலை அடிகள் சாலையில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராஜீவ்காந்தி பேருந்து நிலையம் காலப்போக்கில் கடும் இடநெருக்கடியை சந்தித்தது. இதை இடித்துவிட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.29.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் போக்குவரத்து முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு 31 கடைகள், 2 உணவகங்கள், 3 பயணிகள் காத்திருப்பகம், 4 போக்குவரத்து அலுவலகம், 3 பயணச்சீட்டு பதிவகம், 6 ஆம்னி பேருந்து அலுவலகங்கள், இரு பயணிகளுக்கான இரவு தங்கும் அறைகள், விசாரணை அலுவலகம், தகவல் மையம், முதலுதவி அறை, கட்டுப்பாட்டு அறை, நிர்வாக அலுவலகம், மின் அலுவலகம், பொருள் காப்பகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 46 பேருந்துகள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் வருவதற்கும், செல்வதற்கும் என இரண்டு வழிகள், பொதுமக்கள் வருவதற்கு மைய பகுதியில் தனியாக ஒரு வழி என 3 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு டிசம்பரில் திறப்பு விழா என்று கூறப்பட்டது. ஆனாலும் திறக்கப்படவில்லை. பணிகளை முடிப்பதில் சற்று தாமதம் ஆனதால் திறப்பு தேதி தள்ளிப் போனது.
இப்பணிகளை மேற்கொண்டு வந்த தேசிய கட்டுமான கழகம் தனது தரப்பு பணியை முடித்து, பேருந்து நிலையத்தை சமீபத்தில் புதுச்சேரி நகராட்சியிடம் ஒப்படைத்துள்ளது. அதைத் தொடர்ந்து புதுச்சேரி நகராட்சியும் தனது தரப்பிலான இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திறப்பு விழாவுக்காக பேருந்து நிலைய கோப்புகளை முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி, முதல்வரிடம் தேதியும் கேட்டுள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையம் இம்மாதம் இரண்டாம் வாரத்தில் திறக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.