தெலங்கானா , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதே போல் புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட உத்தரவில், பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டு வந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பஞ்சாப் மாநில புதிய ஆளுநராக குலாம் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் யூனியன் பிரதேசமான சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் செயல்படுவார்.
ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டே ராஜஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ், ஜார்கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரின் ஆளுநராக ராமன் தேகா, மேகாலயா ஆளுநராக சி.எச் விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தெலங்கானா மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகவும் இருந்தார். தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.கைலாசநாதன் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். இவர் 2013 முதல் 2014 வரை குஜராத்தில் அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி உள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த இவர், ஊட்டியில் பள்ளிக் கல்வியையும், சென்னை பல்கலை.யில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Nine states get new Governors: Gulab Chand Kataria for Punjab, Santosh Gangwar goes to Jharkhand
லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மணிப்பூர் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஆளுநர்களின் நியமனம், அவர்கள் பதவி ஏற்கும் நாளில் இருந்து அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“