சபாநாயகர் மீது மூன்று எம்.எல்.ஏ-க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பேரவையில் எடுத்துக் கொள்ளாமல், அதே பேரவையில் சபாநாயகர் மீது நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்.
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபை தொடங்கியவுடன் சபாநாயர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். முதல் அலுவலாக இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. முதல் அமைச்சர் ரங்கசாமி இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் எம்.டிஆர்.ராமச்சந்திரன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏக்கள் நீல. கங்காதரன், காத்தவராயன், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் கிருஷ்ணா, தொழிலதிர் ரத்தன் டாட்டா, இதய சிகிச்சை நிபுணர் கேஎன்.செரிய்ன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து மறைந்த தலைவர்களுக்கு சட்டசபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்பின்னர், சட்டப்பேரவையில் அரசின் கூடுதல் செலவீனங்களுக்கு அனுமதி கோரப்பட்டது.இதனை கொண்டு வந்த முதல் அமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி 2024-2025 ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்காக ரூபாய் 735 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பேரவையில் அனுமதி பெற்றார்.
இதனையடுத்து சட்டபேரவை நிகழ்வுகள் முடிய தேதி குறிப்பிடாமல் சபை நடவடிக்கையை சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார். புதுச்சேரி சட்டமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை உள்ளது என்று முதலமைச்சர் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே சபாநாயகர் மீது சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள், நேரு, அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதைப் பேரவையில் எடுத்துக் கொள்ளாமல்... முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் மீது நம்பிக்கை உள்ளது என தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.