இதய நோய் உள்ளவர்களுக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் மாத்திரை தெரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாக நோயாளிகளுக்கு வழங்கப்படவில்லை என இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ பேசினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ஜிய நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா பேசியதாவது;
NICOUMALONE – CGTROM-1 இந்த மாத்திரை இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இந்த மாத்திரையை யாருக்கும் கொடுக்காமல், மருந்தாளுநர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, ஏழை நோயாளிகளை மருந்து இருப்பு இல்லை எனக்கூறி வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர். இந்த மாத்திரையை சாப்பிடவில்லை என்றால் மாரடைப்பு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் உள்ளது. ஒரு வாரத்திற்கு இந்த மாத்திரையின் விலை ரூ. 600 ஆகும். ஏழை மக்களால் எப்படி சமாளிக்க முடியும். ஏழை மக்களை அதுவும் உயிர் காக்கும் மருந்தை வெளியில் விற்றுவிட்டு அப்பாவி ஏழை மக்களை அலைக்கழிக்க வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், மேற்கண்ட மருந்து இருதய நோயாளிகளுக்கு தடை இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெறி நாய்கள் மட்டும் பிடிப்பதற்கு சட்டம் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக அதிகரித்துள்ள தெருநாய்களை பிடிக்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் தவறிவிட்டது. நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் கூட நாய்களால் பொதுமக்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. கடந்த காலங்களில் தெரு நாய்களை பிடித்து கால்நடைத்துறை கருத்தடை செய்து வந்தது. ஆனால் நீதிமன்ற பிரச்சனை இருப்பதால் புதுச்சேரி மற்றும் உழவர்களை நகராட்சிகள் மத்திய பிராணிகள் நல வாரியத்திடம் அனுமதி பெற்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கையை புதுச்சேரி அரசு ஏன் எடுக்கவில்லை என்று தெரியவில்லை. அதேபோல் தெருநாய்களை மைக்ரோசிப் கருவி பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சியில் உரிமம் வாங்க வேண்டும். வெறிநாய் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது கடைபிடிக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறிதான். தமிழகத்தில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்கள் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் அழைத்து வந்தால் ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிப்பு செய்துள்ளது. மேலும் ரேபிஸ் தடுப்பூசியை, மாநகராட்சியின் அனுமதியும் அவசியம் என்று உள்ளதை புதுச்சேரி அரசு கவனத்தில் கொண்டு இங்கும் அபராதம் விதிக்க வேண்டும்.