புதுச்சேரி சாரம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் திண்டிவனம் மொளசூரைச் சேர்ந்த முனியம்மாளுடன் சேர்ந்து புதுச்சேரி, கல்வே சுப்ரயா செட்டியார் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (எ) ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு போலி உயில் பத்திரம் தயார் செய்துள்ளார். அதனை, முனியம்மாள் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.
இதன்பின்னர், அதனை புதுச்சேரி லாஸ்பேட்டை, அசோக் நகர், கவிக்குயில் தெருவை சேர்ந்த பலராமன் என்பவரிடம் ரூ.35 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளார். இது சம்பந்தமாக புதுச்சேரி, சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு நடத்தி வந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் .நாரா சாய்தனயா, கண்காணிப்பாளர் சிந்தா கோதண்டராமன், இன்ஸ்பெக்டர் பாபுஜி பழனி ராஜா மற்றும் இளந்தமிழ் ஆகியோருடன் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் திண்டிவனம், மொளசூரைச் சேர்ந்த முனியம்மாள் திண்டிவனம், அண்ணா நகரில் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அவரை கடந்த 07 ஆம் தேதி கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் முனியம்மாளைபோலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது, முனியம்மாள் மற்றும் முத்துக்குமார் ஆகியோருடன் நெல்லிதோப்பு, சவரிபடையாட்சி வீதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சில குற்றவாளிகள் சேர்ந்து போலி பத்திரம் தயார் செய்தது தெரிய வந்துள்ளது. அதனை வைத்து விற்க முயற்சி செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட முனியம்மாள் வாக்குமூலம் படி இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.